பாம்பை பாட்டிலில் அடைத்து வைத்திருந்த காட்சி.
வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த தொழிலாளி
- மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
- வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மில்லத் நகர் பகுதியை சேர்ந்தவர் அம்ஜத்( வயது 37), கூலி தொழிலாளி. இவரது வீட்டின் அருகே ஒரு குட்டி நாக பாம்பு ஊர்ந்து சென்றது.
அப்போது குடிபோதையில் இருந்த அம்ஜத், நாக பாம்பு குட்டியை கையில் பிடித்தார். அப்போது பாம்பு அம்ஜத் கையை கடித்ததில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு, கடித்த பாம்பை பாட்டிலில் அடைத்து எடுத்துக் கொண்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு அம்ஜத்க்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாட்டிலில் பாம்புடன் சிகிச்சைக்கு வந்த சம்பவத்தால் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.