தமிழ்நாடு செய்திகள்

பாடல் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீஸ்காரர் சிவபெருமாள்.

விருத்தாசலத்தில் பாடல் பாடி சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தும் போக்குவரத்து போலீஸ்காரர்

Published On 2023-04-29 09:33 IST   |   Update On 2023-04-29 09:33:00 IST
  • போக்குவரத்து விதிமீறலுக்கு காவல்துறை விதிக்கும் அபராத கட்டணத்தையும் பாடலுடன் கூறி அசத்தி வருகிறார்.
  • கடும் வெயிலில் பணிபுரிந்து வரும் போலீசாருக்கு பொதுமக்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

விருத்தாசலம்:

போக்குவரத்து போலீஸ்காரர்கள் என்றால் ரோட்டில் நின்று கொண்டு அந்த வழியாக வரும் வாகனங்களை போக்குவரத்து நெரில் இன்றி அனுப்புவது தான் வழக்கம். ஆனால் ஒரு போக்குவரத்து போலீஸ்காரர் பாட்டு பாடி சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரப் பகுதியில் சென்னை-கன்னியாகுமரி சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் காலை மற்றும் மாலை வேலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் அதிசிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் விருத்தாசலம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வரும் சிவபெருமாள் பணியில் ஈடுபட்டு இருக்கும்போது சாலை விழிப்புணர்வு பற்றி பாடல்கள் மூலம் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார். பஸ்நிலையம், பாலக்கரை, கடைவீதி ஆகிய பகுதிகளில் பணியில் ஈடுபட்டு இருக்கும்போது சிவபெருமாள் ஒலி பெருக்கி மூலம் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவது, இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணிக்க கூடாது. பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனம் ஓட்டகூடாது. இன்சூரன்ஸ், லைசன்ஸ் உள்ளிட்ட வாகன ஆவணங்களை வாகனங்களில் எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும், நகர பகுதியில் வாகனத்தில் அதிவேகமாக செல்லக் கூடாது உள்ளிட்ட சாலை விழிப்புணர்வு பாடல் மூலம் அறிவுறுத்தி வருகிறார்.

மேலும் போக்குவரத்து விதிமீறலுக்கு காவல்துறை விதிக்கும் அபராத கட்டணத்தையும் பாடலுடன் கூறி அசத்தி வருகிறார். அதோடு கடும் வெயிலில் பணிபுரிந்து வரும் போலீசாருக்கு பொதுமக்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறார்.

கோடைகாலத்தில் கடும் வெயிலிலும், வாகன ஓட்டிகளுக்கு பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் போலீஸ்காரர் சிவ பெருமாளை காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News