தமிழ்நாடு

இறந்த குட்டியை வாயில் கவ்வி கொண்டு சுற்றி திரியும் குரங்கு

Published On 2024-01-29 05:08 GMT   |   Update On 2024-01-29 05:08 GMT
  • குட்டி நடக்க முடியாததால் குட்டியை வாயில் கவ்வி கொண்டு குரங்கு செல்வதாக மக்கள் நினைத்திருந்தனர்.
  • குரங்கிடம் இருந்து இறந்த குரங்கு குட்டியை மீட்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருவங்காடு:

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது பேக்கோரை கிராமம். இந்த கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக இந்த கிராமத்தில் குரங்குகள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிந்து வருகின்றன. இந்த குரங்குகள் அவ்வப்போது, வீடுகளுக்குள்ளும் நுழைந்து வந்தன.

இந்நிலையில் இந்த குரங்கு கூட்டத்தில் ஒரு குரங்கு மட்டும் வாயில் குட்டியை கவ்வி கொண்டு சுற்றியது. குட்டி நடக்க முடியாததால் குட்டியை வாயில் கவ்வி கொண்டு குரங்கு செல்வதாக மக்கள் நினைத்திருந்தனர்.

ஆனால் அருகே சற்று தூரத்தில் இருந்து பார்த்த போது, குரங்கு குட்டி இறந்த நிலையில் இருந்தது. இறந்த தன் குட்டியை என்ன செய்வது என்று தெரியாமல், வாயில் கவ்வியபடி குட்டியுடன் அந்த கிராமத்தையை சுற்றி சுற்றி பாசப்போராட்டம் நடத்தி வருகிறது.

சக குரங்குகள் பொதுமக்கள் யாரையும், குரங்கின் அருகே விடாமல் காத்து வருகின்றனர். பொதுமக்கள் யாராவது மீட்க சென்றால் குரங்கள் ஒன்றாக சேர்ந்து மக்களை நோக்கி வருகிறது.

இதையடுத்து மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் இதுவரை வனத்துறையினர் அந்த பகுதிக்கு வரவே இல்லை. குரங்கு இறந்த தனது குட்டியுடன் அந்த பகுதியிலேயே சுற்றி திரிந்து வருகிறது.

இதுகுறித்து மக்கள் கூறும்போது, குரங்கு இறந்த தனது குட்டியுடன் சுற்றி வருகிறது. இறந்த குரங்கு குட்டியில் இருந்து மற்ற குரங்குகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குரங்கிடம் இருந்து இறந்த குரங்கு குட்டியை மீட்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Tags:    

Similar News