தமிழ்நாடு

வீடு தேடி வந்து விண்ணப்பம் வழங்கிய வி.ஏ.ஓ.விடம் "என் ஓட்டு உனக்கு தான் பா" என்ற 90 வயது மூதாட்டி

Published On 2024-03-21 07:55 GMT   |   Update On 2024-03-21 07:55 GMT
  • 85 வயது கடந்த முதியவர்கள் தங்கள் வீட்டிலேயே இருந்து வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
  • பணிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நெல்லை:

நெல்லை பாராளுமன்ற தொகுதியில் 85 வயது முதல் 99 வயது வரையிலான முதியவர்கள் 23 ஆயிரத்து 100 பேரும், 100 வயதை கடந்தவர்கள் 795 பேரும் உள்ளனர்.

இதில் 85 வயது கடந்த முதியவர்கள் தங்கள் வீட்டிலேயே இருந்து வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

அதனடிப்படையில் நெல்லை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் முதியவர்கள் வீடுகளிலேயே இருந்தவாறு வாக்களிக்கும் வகையிலான 12டி விண்ணப்பம் வாக்குச்சாவடி அலுவலர்களால் முதியவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேலப் பாளையம் சிவராஜபுரம் பகுதியில் வசிக்கும் 90 வயது மூதாட்டியான வள்ளியம்மாளிடம் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அனந்த ராமகிருஷ்ணன், வீட்டில் இருந்து வாக்களிக்கும் வகையிலான விண்ணப்பத்தை வழங்கி உள்ளார்.

அப்போது ஓட்டு கேட்டு வேட்பாளர்கள் தான் யாரோ வந்திருக்கிறார்கள் என்று நினைத்த மூதாட்டி வள்ளியம்மாள், அந்த விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு என் ஓட்டு உனக்குதான் பா, உனக்குத்தான் என் ஓட்டு என்று கூறியுள்ளார். உடனே கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் கலகலவென சிரித்து விட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News