தமிழ்நாடு செய்திகள்

நெல்லை அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்த போது எடுத்தபடம். 

வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களில் மருத்துவ முகாம்களில் 95,127 பேருக்கு சிகிச்சை

Published On 2023-12-23 12:35 IST   |   Update On 2023-12-23 12:35:00 IST
  • வெள்ளம் பாதித்த தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 2,682 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது.
  • 93 நடமாடும் மருத்துவ முகாம்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தப்படுகிறது.

நெல்லை:

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ள நீர் புகுந்த இடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். அப்போது சபாநாயகர் அப்பாவு, அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி ஆகியோர் உடன் இருந்தனர்.

மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு, டிஜிட்டல் எக்ஸ்ரே பிரிவு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் தூத்துக்குடி மாவட்டம் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் 6 முதல் 7 அடி உயரத்திற்கு தண்ணீர் வந்த நிலையில் அங்குள்ள கேத் லேப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்ய ஒரு மாத கால ஆகும். அதுவரை நெல்லை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும்.

வெள்ளம் பாதித்த தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 2,682 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. அதன் மூலம் 95 ஆயிரத்து 127 நபர்களுக்கு தற்போது வரை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 764 பேருக்கு காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 2,565 நபர்கள் சளி உள்ளிட்ட நோய்கள் பாதிப்பில் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் குணமாகி வருகிறார்கள்.

இந்த மருத்துவ முகாமை பல நாட்கள் தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவை தவிர 93 நடமாடும் மருத்துவ முகாம்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தப்படுகிறது. இந்த 4 மாவட்டங்களிலும் சேர்த்து 190 நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில் ஒரு மருத்துவர் உள்ளிட்ட 4 மருத்துவ ஊழியர்கள் பணியில் இருப்பார்கள்.

வெள்ளம் அதிகம் பாதித்த பகுதிகளில் ஏரல், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மாநகராட்சி, காயல்பட்டிணம் ஆகிய இடங்களில் அப்பல்லோ, மீனாட்சி மிஷன் உள்ளிட்ட 17 தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து மெகா மருத்துவ முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை நடத்தப்படுகிறது.

நெல்லை மாவட்டத்திலும் தேவைப்பட்டால் மெகா மருத்துவ முகாம் நடத்தப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு சிகிச்சை அளிக்க 50 முதுநிலை மருத்துவர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 8,545 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 12 ஆயிரம் பேர் வரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள நிலையில் இந்த ஆண்டு பாதிப்பு குறைந்துள்ளது. டெங்கு பாதிப்பை பொறுத்தவரை முழு கட்டுப்பாட்டில் உள்ளது . கொரோனா பரவல் தமிழகத்தில் பெரிய அளவில் இல்லை. அதனையும் கண்காணித்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News