தமிழ்நாடு

சொந்த ஊர் சென்று ஓட்டுப்போட ஆர்வம்: அரசு சிறப்பு பஸ்களில் 95 சதவீத இருக்கைகள் முன்பதிவு

Published On 2024-04-17 03:41 GMT   |   Update On 2024-04-17 03:41 GMT
  • 19-ந்தேதி நடக்கும் வாக்குப்பதிவை முன்னிட்டு இன்றும், நாளையும் 10 ஆயிரத்து 214 பஸ்கள் இயக்கப்படுகிறது.
  • டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.

சென்னை:

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடக்கிறது. இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குகள் பதிவாக வேண்டும் என்பதற்காக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் வாக்களிக்க சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்குகிறது. பயணிகள் முறையாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

சென்னையில் இருந்து நாளை (வியாழக்கிழமை) மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு ஊர்களுக்கு புறப்பட உள்ள 2 ஆயிரத்து 92 வழக்கமான சேவைகள் மற்றும் 1,785 சிறப்பு சேவைகளில் கிட்டத்தட்ட 95 சதவீத இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன.

தொடர்ந்து இன்று (புதன்கிழமை) புறப்படும் பஸ்களிலும் போதுமான இருக்கைகள் காலியாக இருக்கின்றன. நாளை (வியாழக்கிழமை) சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள், கூட்ட நெரிசலை தவிர்க்க, தங்கள் பயணத் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

19-ந்தேதி நடக்கும் வாக்குப்பதிவை முன்னிட்டு இன்றும், நாளையும் 10 ஆயிரத்து 214 பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த 2 நாட்களில் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்து 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதேபோல், தேர்தல் முடிந்து, வருகிற 20 மற்றும் 21-ந் தேதிகளில் 8 ஆயிரத்து 304 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு, திருவண்ணாமலை, அரியலூர், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.

சென்னையில் இருந்து 6 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு செல்வதாக இருந்தால் போதுமான பஸ்களை இயக்க போக்குவரத்து துறை தயாராக இருக்கிறது. தற்போது நெல்லை, நாகர்கோவிலுக்கு அதிக போட்டி ஏற்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News