தமிழ்நாடு செய்திகள்

திரிசூலத்தில் சொகுசு கார் மோதி விபத்து: 7 பேர் படுகாயம்

Published On 2023-10-29 09:06 IST   |   Update On 2023-10-29 14:33:00 IST
  • சொகுசு கார் மோதியதில் கார், மோட்டார் சைக்கிள், ஆட்டோ சேதமடைந்தது.
  • விபத்து காரணமாக சென்னை-திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தாம்பரம்:

கேரள மாநிலம், கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (28). டிரைவர். இவர் அடையாறில் உள்ள தொழில் அதிபர் ஒருவரிடம் கார் டிரைவராக சமீபத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

இந்த நிலையில் இன்று காலை தொழிலதிபர் சொகுசு காரில் பல்லாவரத்தில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக புறப்பட்டார். காரை ரஞ்சித் ஓட்டினார்.

திரிசூலம் சிக்னலில் நின்று விட்டு மீண்டும் கார் புறப்பட்டபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் அதிவேகமாக சென்றது.

தறிகெட்டு ஓடிய கார், சென்னை விமான நிலையம் அருகே உள்ள மேம்பால சுவரில் இடிப்பது போல் சென்றதால் டிரைவர் ரஞ்சித் வண்டியை திருப்பினார்.

இதனால் தறிகெட்டு ஓடிய கார், சாலையோரம் நின்று கொண்டிருந்த கார், ஆட்டோ, மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது. மேலும் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள் கூட்டத்துக்குள் புகுந்து நின்றது.

இதில் திரிசூலம் கண்ணபிரான் கோயில் தெருவை சேர்ந்த சண்முக நாதன் (50), சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்த பிரபு(29) மற்றும் பஸ்சுக்கு காத்திருந்த பயணிகள் என மொத்தம் 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 5 பேர் பெண்கள் ஆவர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு, உடனடியாக சிகிச்சைக்காக குரோம்பேட்டை மற்றும் தாம்பரத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் காரில் இருந்த ரஞ்சித், மற்றும் தொழிலதிபர் காயமின்றி உயிர்தப்பினர். டிரைவர் ரஞ்சித்துக்கு இந்த சொகுசு காரை ஓட்டி பழக்கம் இல்லை என்று தெரிகிறது. விபத்து ஏற்படுத்திய டிரைவர் ரஞ்சித் இன்று தான் முதல் முறையாக அந்த காரை இயக்கியது குறிப்பிடத்தக்கது. விபத்து தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விடுமுறை நாளான இன்று காலை நேரம் என்பதால் அந்த சாலையில் வாகன போக்குவரத்தும் பஸ் நிறுத்தத்தில் பயணிகளும் குறைந்த அளவில் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் பலி ஏற்படவில்லை. விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News