தமிழ்நாடு

சென்னையில் இன்று 54 பேருக்கு டெங்கு பாதிப்பு: தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளதாக மா.சுப்பிரமணியன் தகவல்

Published On 2023-09-30 08:41 GMT   |   Update On 2023-09-30 08:41 GMT
  • 363 நபர்கள் டெங்கு பாதிப்பிற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை:

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழகத்தில் டெங்கு மற்றும் மழைக்கால தொற்று நோய்களான வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு 2,65,834 டெங்கு மாதிரிகள் எடுக்கப்பட்டது, அதில் 6,430 நபர்களுக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டது. இந்தாண்டு இதுவரை 2,42,743 டெங்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் 4,524 நபர்களுக்கு டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 15 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 363 நபர்கள் டெங்கு பாதிப்பிற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் உள்ள சுமார் 17 லட்சம் வீடுகளின் பகுதிகள் சிறுவட்டங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வட்டத்திற்கும் சுமார் 500 வீடுகள் கொண்ட தெருக்களில் வாரந்தோறும் கொசு புழு வளரிடங்களான மேல்நிலை, கீழ்நிலைத் தொட்டி, கிணறு, தேவையற்ற பொருட்கள் (டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள்) போன்றவைகளை கண்டறிந்து கொசு புழுக்கள் இருப்பின் அழித்து வருகின்றனர். டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்காக 318 மருத்துவ அலுவலர்கள், 635 செவிலியர்கள், 954 கொசு ஒழிப்புக்கென நிரந்தர கொசு ஒழிப்பு பணியாளர்கள், 2,324 ஒப்பந்த பணியாளர்கள் என ஆக மொத்தம் 4,231 மருத்துவ பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

சென்னையில் இன்று மட்டும் 54 நபர்கள் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News