தமிழ்நாடு

கன்னியாகுமரி வந்த அரசு பஸ்சில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள்- வாலிபரிடம் போலீசார் விசாரணை

Published On 2023-10-24 07:40 GMT   |   Update On 2023-10-24 07:40 GMT
  • தவறுதலாக விட்டுச்சென்ற பணமா? அல்லது யாராவது அதனை மறைத்து கொண்டு வந்ததா? என்று சந்தேகம் ஏற்பட்டது
  • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்:

கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பஸ் மற்றும் பல்வேறு வாகனங்களில் வருகின்றனர். வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அவர்கள் வந்து செல்கின்றனர்.

நேற்று மாலை பெங்களூரூவில் இருந்து புறப்பட்ட அரசு பஸ் இன்று காலை 5.30 மணிக்கு கன்னியாகுமரி வந்தது. பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிச்சென்றதும், பணிமனைக்கு செல்ல டிரைவர் மற்றும் கண்டக்டர் புறப்பட்டனர்.

அதற்கு முன்னதாக பஸ்சுக்குள் யாராவது இருக்கிறார்களா? ஏதேனும் பொருட்களை விட்டுச்சென்றுள்ளார்களா? என அவர்கள் சோதனை செய்தனர். அப்போது, பஸ்சின் கடைசி சீட்டுக்கு அருகே உள்ள டூல்ஸ் பாக்சை (பழுது உபகரணங்கள் வைக்கும் பெட்டி) திறந்து பார்த்தனர்.

அங்கு 500 ரூபாய் நோட்டுகள் 4 கட்டுகள் இருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனை எடுத்து எண்ணி பார்த்தபோது ரூ.2 லட்சம் இருப்பது தெரியவந்தது. இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பணத்தை பார்வையிட்டனர்.

அதனை வைத்துச்சென்றது யார்? என்ற விவரம் தெரியவில்லை. தவறுதலாக விட்டுச்சென்ற பணமா? அல்லது யாராவது அதனை மறைத்து கொண்டு வந்ததா? என்று சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு வாலிபர் அங்கு வந்து பஸ்சில் தான் வந்தபோது, சிம்கார்டை தொலைத்து விட்டதாக கூறி பஸ்சுக்குள் ஏறி தேடினார். அவரது நடவடிக்கை சந்தேகத்திற்கிடமாக இருந்தது. இந்நிலையில் பணத்தை விட்டுச்சென்றதாக அவர் கூறினார். இதனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரையும், பஸ்சில் கைப்பற்றப்பட்ட ரூ.2 லட்சத்தையும் போக்குவரத்து துறையினர், கன்னியாகுமரி போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள், விசாரணை நடத்தியபோது, வாலிபர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் என்றும், சுசீந்திரம் கோவிலுக்கு வந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் பணத்தை கொண்டு வந்தது ஏன்? அது அவருடையது தானா? என்ற தகவல் தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News