தமிழ்நாடு

ரூ.1 கோடியுடன் காரில் வந்த இலங்கை தமிழர் உட்பட 4 பேர் சிக்கினர்- ஹவாலா பணமா?

Published On 2023-11-06 06:48 GMT   |   Update On 2023-11-06 06:48 GMT
  • பிடிபட்ட 4 பேரும் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பதில் கூறுவதால் போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
  • பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1கோடியை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

போரூர்:

விருகம்பாக்கம், பகுதியில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடப்பதாக தி.நகர் துணை கமிஷனர் அங்கித் ஜெயினுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவுப்படி சப் - இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமையிலான தனிப்படை போலீசார் விருகம்பாக்கம், ஆற்காடு சாலையில் நேற்று மாலை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சாலையோரம் சொகுசு கார் ஒன்று நின்று நீண்ட நேரம் சந்தேகத்திற்கிடமாக கொண்டு இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த காரில் இருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தி சோதனையிட்டனர். இதில் காரில் இருந்த ஒரு பையில் ரூ.1 கோடி ரொக்கப் பணம் இருந்தது. மேலும் விசாரணையில் காரில் இருந்தவர்கள் இலங்கை தமிழர் கமலநாதன், மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன், மயிலாடுதுறையை சேர்ந்த கார்த்திகேயன், கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார்த்திகேயன் என்பது தெரிந்தது.

அவர்களிடம் பணத்துக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து ரூ.1 கோடியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பிடிபட்ட 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரூ.1 கோடி ரொக்கப்பணம் எப்படி கிடைத்தது?அதனை எங்கிருந்து யாருக்கு கொண்டு செல்கிறார்கள்? இதில் தொடர்புடையவர்கள் யார்? யார்? என்பது குறித்து வருவாய் ஆய்வாளர் சவிதா முன்னிலையில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். பிடிபட்ட 4 பேரும் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பதில் கூறுவதால் போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. பிடிபட்டது ஹவாலா பணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1கோடியை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவர்களும் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News