தமிழ்நாடு செய்திகள்

உத்தமபாளையத்தில் மதுபோதையில் வாலிபரை வெட்டிக்கொன்ற 4 பேர் கைது

Published On 2023-05-25 10:50 IST   |   Update On 2023-05-25 10:50:00 IST
  • சதீஸ்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
  • சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் தலைமையிலான போலீசார் அவரது உடலை கைப்பற்றி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் கோம்பை அணைமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் சதீஸ்குமார் (28). கூலித்தொழிலாளி. இவர்மீது தேனி, கோம்பை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

மேலும் அடிக்கடி இரட்டை மாட்டுவண்டி பந்தயமும் நடத்தி வந்துள்ளார். இதனால் சதீஸ்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று அவர் அரண்மனைத்தெரு குளம் அருகே மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் சதீஸ்குமாருடன் தகராறில் ஈடுபட்டனர்.

மேலும் மாட்டு வண்டியில் இருந்த அச்சாணிக்கட்டை, உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தும் இரும்புக்கம்பிகள் ஆகியவற்றைக் கொண்டு கடுமையாக தாக்கினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கோம்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் தலைமையிலான போலீசார் அவரது உடலை கைப்பற்றி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில் 9 பேர் கொண்ட கும்பல் சதீஸ்குமாரை தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து கக்கன்ஜி காலனியை சேர்ந்த மணிகண்டன், திரு.வி.க. தெருவை சேர்ந்த பிரவீண், தீபக், கிராம சாவடி தெருவை சேர்ந்த புகழேந்தி ஆகிய 4 பேரை கைது செய்து சூர்யா உள்பட மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News