தமிழ்நாடு செய்திகள்

கைப்பற்றப்பட்ட மஞ்சள் மூட்டைகள் மண்டபம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டு இருந்த காட்சி.

இலங்கைக்கு கடத்த முயன்ற 35 மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்

Published On 2022-11-30 08:29 IST   |   Update On 2022-11-30 08:29:00 IST
  • 4 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள், அந்த வாகனங்களை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
  • கைப்பற்றப்பட்ட மஞ்சள் மூட்டைகள் மற்றும் பிடிபட்ட நபர் மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு குற்ற நுண்ணறிவு பிரிவு மற்றும் கடலோர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது 4 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள், அந்த வாகனங்களை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசார் விரட்டிச்சென்று ஒரு 17 வயது சிறுவனை பிடித்தனர்.

விசாரணையில் அவர், வேதாளை கடற்கரையோரத்தில் நிறுத்தி வைத்திருந்த நாட்டுப்படகு ஒன்றில் 35 மூட்டைகளில் மஞ்சள் அடுக்கி வைத்து இருப்பதாகவும், அதனை இலங்கைக்கு கடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். போலீசார் விரைந்து சென்று அந்த நாட்டுப்படகையும், 35 மஞ்சள் மூட்டைகளையும் கைப்பற்றினர். அந்த மூட்டைகளில் 2 ஆயிரத்து 100 கிலோ மஞ்சள் இருந்தது.

பின்னர் அந்த நபரை மண்டபம் கடலோர காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட மஞ்சள் மூட்டைகள் மற்றும் பிடிபட்ட நபர் மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டார். தப்பி ஒடியவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் வந்த 4 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள்.

இதே வேதாளை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 300 கிலோ போதை பவுடர் பிடிபட்ட சம்பவத்துக்கு மறுநாளே இலங்கைக்கு கடத்த முயன்ற 2,100 கிலோ மஞ்சள் பிடிபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News