தமிழ்நாடு செய்திகள்
தற்கொலை

பொதுத்தேர்வு விடைத்தாள் பாதுகாப்புக்கு இருந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Published On 2022-05-18 09:43 IST   |   Update On 2022-05-18 09:43:00 IST
மன உளைச்சல் காரணமாக போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சேந்தரகிள்ளை மணிக்கொல்லை தெருவை சேர்ந்தவர் முனுசாமி. அவரது மகன் பெரியசாமி (வயது 26). ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வுக்குரிய சிதம்பரம் பகுதி விடைத்தாள்கள் அனைத்தும் சிதம்பரம் தில்லை நகரில் உள்ள தனியார் பள்ளியில் அறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இங்கு சுழற்சி முறையில் போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

கடந்த 6-ந் தேதி முதல் ஆயுதப்படை போலீஸ்காரர் பெரியசாமி இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருடன் இன்னொரு போலீஸ்காரர் மற்றும் தீயணைப்பு படைவீரரும் அங்கிருந்தார்.

இன்று அதிகாலை துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த சக போலீசார் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் வந்த பகுதிக்கு சென்றனர்.

அப்போது அங்கு போலீஸ்காரர் பெரியசாமி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர்.

தகவல் அறிந்த சிதம்பரம் போலீஸ் டி.எஸ்.பி. ரமேஷ் ராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளது. தற்கொலை செய்துகொண்ட பெரியசாமிக்கும், உறவினர் பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் ஜூன் மாதம் 10ந் தேதி நடைபெற உள்ளது. ஆனால் பெரியசாமி வேறு ஒரு பெண்ணை காதலித்துள்ளார். தனது விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் இதனையும் மீறி பெற்றோர் பெரியசாமிக்கு உறவுக்கார பெண்ணை நிச்சயித்துள்ளனர். எனவே இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெரியசாமிக்கு உடல் ரீதியாகவும் பிரச்சினை உள்ளது. அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் பெரியசாமிக்கு காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் கடந்த 6-ந் தேதிதான் சிதம்பரத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே மனஉளைச்சலில் இருந்துள்ளார். எனவே இதன் காரணமாகவும் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News