தமிழ்நாடு செய்திகள்
கோப்புப்படம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் சுட்டுத்தள்ளப்படுவார்கள்- தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி எச்சரிக்கை

Published On 2022-05-14 14:40 IST   |   Update On 2022-05-14 14:40:00 IST
இளம்பெண் பலாத்கார வழக்கில் கொள்ளையன் கைது செய்யப்பட்டு இருப்பது தொடர்பாக தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி எச்சரிக்கை ஒன்று விடுத்துள்ளார்.
பூந்தமல்லி:

குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியில் உள்ள வீட்டில் தனது தாய், அக்காவுடன் வசித்து வந்த 22 வயது பெண்ணின் அறைக்குள் நள்ளிரவில் சென்ற மர்மநபர் அந்த பெண்ணை தாக்கி பலாத்காரம் செய்ததாக குன்றத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை செய்த போது வீட்டிற்குள் வந்த நபர் போதையில் இருந்தார் என்ற தகவலை மட்டுமே தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் போதையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை ஒவ்வொன்றாக சேகரித்தனர்.

அவ்வாறு சேகரிக்கப்பட்ட புகைப்படங்களை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காண்பித்தபோது குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த சதீஷ் (19), என்பவரின் புகைப்படத்தை அவர் உறுதி செய்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது சதீஷ் என்பது தெரியவந்தது.

அந்த நபரை குன்றத்தூர் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை பகுதியில் மடக்கி பிடித்து கைது செய்தனர். சதீஷ் அதே பகுதியில் உள்ள தண்ணீர் கம்பெனியில் வேலைக்கு செல்வது வழக்கம். இவர் வேலைக்கு செல்லும் போது பாதிக்கப்பட்ட பெண் வீட்டின் பால்கனியில் நின்று செல்போனில் பேசுவதை பார்த்தபடி சென்றுள்ளார்.

மேலும் சதீஷ் ஆண் நபர்கள் இல்லாத வீடுகள், ஆட்கள் இல்லாத வீடுகளை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் நபர் என்பதால் அந்த வீட்டை பற்றி விசாரித்துள்ளார்.

அந்த வீட்டில் ஆண் நபர்கள் யாரும் இல்லை என்பதை அறிந்து கொண்ட அவர் சம்பவத்தன்று கஞ்சா போதையில் நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்து கதவை தட்டியுள்ளார். தனது அக்கா தான் கதவை தட்டுகிறார் என நினைத்து அந்த பெண் கதவை திறந்தவுடன் பெண்ணின் முகத்தில் பலமாக தாக்கி விட்டு அறைக்குள் நுழைந்து கதவை சாத்தி கொண்டார்.

மேலும் வீட்டில் இருக்கும் செல்போன், பணம், நகை ஆகியவற்றை தரும்படி கேட்டுள்ளார். தன்னிடம் ஏதும் இல்லை என்று அந்த பெண் கூறியதையடுத்து அந்த நபர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

கஞ்சா போதையில் அங்கேயே படுத்து தூங்கி விட்டு தனக்கு 2 நாட்களில் ரூ.10 ஆயிரம் தயார் செய்து கொடுக்க வேண்டும் எனவும் இதனை வெளியே சொல்லக்கூடாது எனவும் கூறி மிரட்டி விட்டு அதிகாலையில் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளான். போலீசார் சதீசை கைது செய்யும்போது போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடினார்.

அப்போது வழுக்கி விழுந்ததில் ஒரு கை, கால் மற்றும் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் அவனை பிடித்து கைது செய்தனர். இதற்கிடையே இந்த வழக்கு தாம்பரம் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

மகளிர் போலீஸ் அவனிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இளம்பெண் பலாத்கார வழக்கில் கொள்ளையன் கைது செய்யப்பட்டு இருப்பது தொடர்பாக தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி எச்சரிக்கை ஒன்று விடுத்துள்ளார். அதில் ‘பெண்களுக்கு எதிரான குற்றங்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் சுட்டுத்தள்ளப்படுவார்கள்’ என்று கூறியுள்ளார்.

Similar News