தமிழ்நாடு செய்திகள்
கேரளாவில் மாணவி பலி: காஞ்சிபுரத்தில் ஷவர்மா கடைகளில் சுகாதார அதிகாரிகள் ஆய்வு
சுகாதாரமற்ற முறையில் செயல்படும் கடைகள் மீதும், உரிய பதிவுகள் இல்லாத கடைகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தெரிவித்தார்.
காஞ்சிபுரம்:
கேரளா மாநிலம் காசர் கோட்டில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய சாலைகளான காந்தி ரோடு, காமராஜர் சாலை, மேட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஷவர்மா கடைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த கடைகளில் கோழி இறைச்சியை சுகாதாரமற்ற நிலையில் தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக புகார் எழுந்து உள்ளது.
இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் காஞ்சிபுரத்தில் உள்ள ஷவர்மா கடைகளில் ஆய்வு செய்தனர். இது பற்றி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அனுராதாவிடம் கேட்டபோது, ஷவர்மா கடைகள் குறித்து நாங்கள் ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளோம். சுகாதாரமற்ற முறையில் செயல்படும் கடைகள் மீதும், உரிய பதிவுகள் இல்லாத கடைகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.