தமிழ்நாடு செய்திகள்
கொலை

ஸ்ரீபெரும்புதூரில் நடந்த கொலையில் திருப்பம்- கள்ளக்காதலியுடன் சேர்ந்து விபசார அழகியை தீர்த்து கட்டிய கணவர்

Published On 2022-04-26 15:40 IST   |   Update On 2022-04-26 15:40:00 IST
மனைவி விபசாரத்தில் ஈடுபட்டதால் அவரை கள்ளக்காதலியுடன் சேர்ந்து கணவர் கொலை செய்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர்:

காஞ்சிபுரம் அடுத்த காவேரிபாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரியா(வயது22). இவர் கடந்த 23-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தெரேசாபுரம் அருகே முட்புதரில் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கணவரை பிரிந்து வாழ்ந்த அவர் விபசார புரோக்கர்களுடன் சேர்ந்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரிந்தது.

இதைத்தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் பிரியாவின் கணவரான நவீன்குமார் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் கள்ளக்காதலியான கல்பனாவுடன் சேர்ந்து மனைவி பிரியாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு உடலை ஸ்ரீபெரும்புதூர் அருகே வீசி சென்றதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து நவீன்குமார், அவரின் கள்ளக்காதலி கல்பனா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. போலீசில் நவீன் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறிஇருப்பதாவது:-

எனக்கும் பிரியாவுக்கும் பிறந்த குழந்தை இறந்து விட்டது. இதன் பின்னர் பிரியா தடம்மாறி சென்றார். அவர் விபசார புரோக்கர்களுடன் சேர்ந்து விபசாரத்தில் ஈடுபட்டார். இது எனக்கு பிடிக்கவில்லை.

இதற்கிடையே எனக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த கல்பனாவுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தோம்.

எனினும் பிரியா விபச்சார தொழிலில் ஈடுபடுவது பிடிக்காததால் அவளை பலமுறை கண்டித்தேன். ஆனால் அவள் அதனை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து விபசாரத்தில் ஈடுபட்டார்.

மேலும் என்னையும், கல்பனாவையும், இணைத்து பலரிடம் அவதூறாக பேசி வந்தார். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கஞ்சா விற்றதாக கல்பனா மற்றும் சகோதரனை போலீசில் பிரியா பிடித்துக் கொடுத்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நான் பிரியவை தீர்த்துகட்ட முடிவு செய்தேன். இதுபற்றி கல்பனாவிடம் கூறியபோது அவரும் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து சம்பவத்தன்று பிரியாவிடம் பேச வேண்டும் என்று அழைத்தேன். அவளும் வர சம்மதித்தாள். அவளை சின்ன காஞ்சிபுரம் டீச்சர்ஸ் காலனி பகுதியில் உள்ள வாடகை வீட்டிற்கு அழைத்து சென்றோம். அங்கு பிரியாவுக்கு மது குடிக்க கொடுத்தோம்.

மதுகுடித்த போதையில் பிரியா இருந்தார். உடனே நானும், கல்பனாவும் சேர்ந்து பிரியாவின் கழுத்தை இறுக்கியும், வாயில் துணியை திணித்தும் கொலை செய்தோம். அவள் இறந்து விட்டதை உறுதி செய்த பின்னர் போலீசில் சிக்காமல் இருக்க உடலை அங்கிருந்து வேறு இடத்துக்கு கொண்டு சென்று வீச திட்டமிட்டோம்.

நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் பிரியாவின் உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு சென்றோம். பின்னர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தெரேசாபுரம் அருகே முட்புதரில் வீசிவிட்டு தப்பி சென்று விட்டோம். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

கொலை நடந்த இடத்தில் இருந்து பிரியாவின் உடல் வீசப்பட்ட தெரேசாபுரம் பகுதி சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இவ்வளவு தூரம் உடலை போலீசுக்கு தெரியாமல் நவீனும் கல்பனாவும் கொண்டு வந்து வீசி உள்ளனர்.

கொலைக்கு வேறுஏதேனும் காரணம் உள்ளதா? அவர்களுக்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்று கைதான 2 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Similar News