தமிழ்நாடு
தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய லோகோ

தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய ‘லோகோ’ அறிமுகம்

Published On 2022-04-11 09:40 GMT   |   Update On 2022-04-11 09:40 GMT
திருநீர்மலை பெருமாள்கோவில், விமானப்படைதளம், ரெயில் நிலையம், எம்.ஐ.டி. கல்லூரி தோற்றத்துடன் தாம்பரம் மாநகராட்சிக்கு எனத் தனி லோகோ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
தாம்பரம்:

சென்னை புறநகர் பகுதியை ஒட்டிய 5 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளை இணைத்து புதிதாக தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது. மொத்தம் 70 வார்டுகள் உள்ளன. சமீபத்தில் நடந்த தேர்தலில் மாநகராட்சி முதல் மேயராக வசந்தகுமாரி, துணை மேயராக காமராஜர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் தாம்பரம் மாநகராட்சிக்கு எனத் தனி லோகோ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

அந்த லோகோவில் தாம்பரத்தில் செயல்படும் இந்திய விமானப்படை பயிற்சி மையம், 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில், 3-வது முனையம் அந்தஸ்து பெற்ற தாம்பரம் ரெயில் நிலையம், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் படித்த எம்.ஐ.டி. கல்லூரியின் தோற்றம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆன்மிகம், படிப்பு, போக்குவரத்து, வீரம் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் இந்த லோகோ வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட திருநீர்மலை கோயில், 108 திவ்ய தேசங்களில் 61-வது ஸ்தலமாகும். உலக அளவில் போற்றப்படும் நமது நாட்டின் ராணுவ விமான இயக்கும் பயிற்சி, தொழிற்பயிற்சி, தள பயிற்சிகள் என பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளும் தாம்பரம் விமானப் படை மையம் உள்ளது. எம்.ஐ.டி. கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒரு கிளை கல்லூரியாக, 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இதில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், இஸ்ரோ குழும நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த சிவன் ஆகியோர் படித்த கல்லூரி என்ற பெருமையும் உண்டு.

தாம்பரம் ரெயில் நிலையம் இந்திய ரெயில்வே துறையில் தென்னிந்திய அளவில் முக்கிய சந்திப்பாக அமைந்துள்ளது. இது, 1931-ம் ஆண்டு நிறுவப்பட்ட ரெயில் நிலையம் ஆகும் இது போன்று தாம்பரத்தில் உள்ள முக்கிய பகுதிகளின் பெருமைகளை அடக்கிய லோகோ தாம்பரம் மாநகராட்சிக்கு புதிதாக தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News