காஞ்சிபுரம் அருகே பள்ளி மாணவர்களின் பேச்சுப்போட்டியை மரத்தடியில் அமர்ந்து ரசித்த மாவட்ட கலெக்டர்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக ஆர்த்தி உள்ளார். இவர் அவ்வப் போது மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் பள்ளி ஒன்றில் நடந்த மாணவர்களின் பேச்சுப் போட்டியை கலெக்டர் ஆர்த்தி மரத்தடியில் அமர்ந்து ரசித்த காட்சி வரவேற்பை பெற்று உள்ளது.
காஞ்சிபுரம், ஐயங்கார் குளத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் பேச்சுபோட்டி நடைபெற்றது.இதற்காக பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில் பங்கேற்ற கலெக்டர் ஆர்த்தி மாணவர்களின் முன்பு வகுப்பறையின் திண்ணையிலேயே மரத்தடியில் அமர்ந்து பேச்சுப்போட்டியை ரசித்து பார்த்தார். அப்போது மாணவ-மாணவிகளுக்கு அவர் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து அறிவுரை வழங்கினார். மாணவர்களின் பேச்சுப் போட்டியை மரத்தடியில் அமர்ந்து கலெக்டர் ஆர்த்தி ரசித்த செயல் அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியையொட்டி மாணவ- மாணவிகளுக்கு மஞ்சப்பைகளை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, மாசுகட்டுப்பாட்டு வாரிய செயற் பொறியாளர் ரவிச் சந்திரன் பங்கேற்றனர்.