தமிழ்நாடு செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.22 லட்சம் பணம்

வேலூர் நில அளவையர் வீட்டில் ரூ.22 லட்சம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை

Published On 2022-01-30 13:36 IST   |   Update On 2022-01-30 13:36:00 IST
வேலூரில் 11 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் நில அளவையர் வீட்டில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.22 லட்சத்தி 84 ஆயிரத்தி 650 ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்:

வேலூர் சேண்பாக்கம் கழனிக்காட்டு தெருவை சேர்ந்தவர் பாலாஜி (வயது 37). திருப்பத்தூர் மாவட்டம் ஆ ம்பூர் தாலுகா அலுவலகத்தில் நில அளவையராக பணியாற்றி வருகிறார்.

ஆம்பூர் அருகே உள்ள மின்னூரை சேர்ந்தவர் சேகர். சென்னையில் தனியார் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இவர் தனது கிராமத்தில் உள்ள 22 சென்ட் நிலம் மற்றும் வீட்டு மனைகளை அளவிடுவதற்கான ஆன்லைனில் விண்ணப்பித்தார். இதனை தொடர்ந்து நில அளவையர் பாலாஜி, சேகரை அழைத்து பேசினார். அப்போது 4 இடங்களை அளவீடு செய்து பட்டாவை பிரித்து பதிவு செய்வதற்காக 12 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இறுதியாக ரூ.8 ஆயிரம் கேட்டார்.

இதுகுறித்து சேகர் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.அதன் பேரில் ஒரு மாதமாக பாலாஜியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்து வந்தனர்.

நேற்று பிற்பகல் சேகரிடம் ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்தனர். அந்த ரூபாய் நோட்டுகளை பாலாஜி லஞ்சமாக வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து வேலூர் சேண்பாக்கத்தில் உள்ள நில அளவையர் பாலாஜியின் வீட்டில் மாலை 4 மணி அளவில் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் அதிரடி சோதனை நடத்தினர்.

இன்று அதிகாலை 2.30 மணி வரை சோதனை நீடித்தது. 11 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் நில அளவையர் பாலாஜி வீட்டில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.22 லட்சத்தி 84 ஆயிரத்தி 650 ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வங்கி, வீடு தொடர்பான ஆவணங்களை கணக்கிட்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் லஞ்சமாக வாங்கி குவித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நில அளவையர் பாலாஜியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

நில அளவையர் பாலாஜியின் தந்தையும் நில அளவையர் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். அவர் கடந்த 2017-ம் ஆண்டு உயிரிழந்தார். வாரிசு அடிப்படையில் பாலாஜிக்கு வேலை கிடைத்து. இவர் 2019-ம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட நில அளவையாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News