தமிழ்நாடு செய்திகள்
ஏரியில் மூழ்கி பலியான மாணவிகள்.

ஏரியில் மூழ்கி 3 மாணவிகள் பலி - ஆடுகளை குளிக்க வைத்தபோது பரிதாபம்

Published On 2022-01-16 09:39 IST   |   Update On 2022-01-16 09:39:00 IST
திருவண்ணாமலை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 மாணவிகள் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் சு.கம்பம்பட்டு பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் மாபூஸ்கான் (வயது 34). இவரது மனைவி தில்ஷாத் (30). இவர்களுக்கு நஸ்ரின் (15) நசீமா (15) ஷாகிரா (12) ஷபரின் (10) பரிதா (8) ஆகிய 5 மகள்கள்.

இதில் இரட்டையர்களான நஸ்ரின், நசீமா ஆகியோர் 9-ம் வகுப்பும், ஷாகிரா 7-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

மாபூஸ்கான் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள ஏரியில் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை கழுவுவதற்காக நஸ்ரின், நசீமா, ஷாகிரா ஆகியோர் ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் ஆடுகளை ஏரியில் இறக்கி தண்ணீரில் குளிப்பாட்டி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக நஸ்ரின், நசீமா, ஷாகிரா ஆகிய 3 பேரும் ஆழமான பகுதியில் இறங்கியதால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 3 மாணவிகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News