செய்திகள்
தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் மேலும் 4 அடி உயர்வு

Published On 2021-11-29 06:01 GMT   |   Update On 2021-11-29 06:01 GMT
தாமிரபரணி ஆற்றில் பல்வேறு கிளை நதிகளும் வந்து சேர்வதால் ஸ்ரீவைகுண்டம் மற்றும் முக்காணி தடுப்பணையை கடந்து விநாடிக்கு சுமார் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் கடலுக்கு செல்கிறது.
நெல்லை:

வங்கக்கடலில் தென்பகுதியில் காற்றின் மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலை நிற்பதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

நெல்லை மாநகர பகுதியில் உள்ள டவுனில் மழை காரணமாக ஏராளமான தெருக்களில் வெள்ளம் புகுந்தது. அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

2 நாட்களுக்கு பிறகு நேற்றுதான் ஒரளவு வெள்ளம் குறைந்தது.

இந்தநிலையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் கனமழை பெய்தது. பாபநாசம் அணைப்பகுதியில் அதிகபட்சமாக 91 மில்லிமீட்டர் மழை பெய்தது. மணிமுத்தாறு அணைப்பகுதியில் 84 மில்லிமீட்டர் மழை பெய்தது.

மேலும் அம்பை, நாங்குநேரி, சேரன்மகாதேவி, பாளை உள்ளிட்ட பல்வேறு நகரப்பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்ததால், காட்டாற்று வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்து செல்கிறது.

கனமழை காரணமாக பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 10 ஆயிரத்து 92 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருகிறது. தற்போது பாபநாசம் அணை நீர்மட்டம் 139.05 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 149.18 அடியாக உள்ளது.

அணையில் இருந்து ஆற்றுக்கு விநாடிக்கு 8,301 கனஅடி திறந்து விடப்படுகிறது. மேலும் தாமிரபரணி பாசன கால்வாய்களிலும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணை பாதுகாப்பு கருதி இன்று கூடுதல் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படுகிறது.

தற்போது தாமிரபரணி ஆற்றில் விநாடிக்கு 12,480 கனஅடி தண்ணீர் பாபநாசம் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. காட்டாற்று வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்து செல்வதால் நெல்லை பகுதியில் சுமார் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் செல்கிறது.

இதனால் தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று குறுக்குத்துறை முருகன் கோவில் கீழ்பகுதியை மூழ்கடித்து சென்ற வெள்ளம், இன்றும் தொடர்ந்து செல்கிறது. முருகன் கோவில் கோபுரம் மற்றும் மண்டபத்தின் மேல்பகுதி மட்டுமே தண்ணீருக்கு மேல் தெரிகிறது. மற்ற அனைத்து பகுதிகளும் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

நெல்லை சந்திப்பு தைப்பூச மண்டபம் உள்பட தாமிரபரணி கரையோரம் உள்ள அனைத்து மண்டபங்களையும் வெள்ளம் மூழ்கடித்து செல்கிறது.

தாமிரபரணி ஆற்றில் பல்வேறு கிளை நதிகளும் வந்து சேர்வதால் ஸ்ரீவைகுண்டம் மற்றும் முக்காணி தடுப்பணையை கடந்து விநாடிக்கு சுமார் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் கடலுக்கு செல்கிறது.

இதனால் தாமிரபரணி ஆற்றில் யாரும் குளிக்கக்கூடாது என்றும், ஆற்றங்கரைக்கு பொதுமக்கள் சென்று செல்பி, புகைப்படம் எடுக்கக்கூடாது என்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை விநாடிக்கு 4,393 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணை நிரம்பாததால் தண்ணீர் எதுவும் நிரம்பப்படவில்லை. நேற்று 103.50 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரேநாளில் 4 அடி உயர்ந்து இன்று காலை 107.55 அடியாக உள்ளது.

வடக்கு பச்சையாறு அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 37 அடியாக நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று 39 அடியானது. கடனாநதி, ராமநதி, கருப்பாநதி உள்பட மற்ற அணைகள் அனைத்தும் நிரம்பி விட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வண்டலோடை தடுப்பணையும் கடந்த 2 நாட்கள் பெய்த மழையில் நிரம்பி விட்டது. கடந்த 26-ந் தேதி 15 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று முழுகொள்ளளவான 28.70 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.

Tags:    

Similar News