செய்திகள்
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய காட்சி

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு- கடலூரில் 10 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

Published On 2021-11-20 06:28 GMT   |   Update On 2021-11-20 09:40 GMT
தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் ஒன்றியத்துக்குட்பட்ட அழகியநத்தம் முதல் தாழங்குடா வரையில் உள்ள 4 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியது.
கடலூர்:

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதுதவிர வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானதால் கடலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது.

இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கடலூர் நகராட்சிக்குட்பட்ட ஆல்பேட்டை அருகே தென்பெண்ணையாறு கடலில் கலக்குகிறது.

இந்த ஆறுக்கு கர்நாடக மாநிலத்தில் திறக்கப்படும் உபரிநீர், கிருஷ்ணகிரி அணைக்கு வந்து சாத்தனூர் அணையில் சேருகிறது. அங்கிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரால் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

தற்போது கனமழை பெய்ததால் தென்பெண்ணை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து 50 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

இது தவிர கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையாலும், காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் மூலம் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

முதல்கட்டமாக தென்பெண்ணை ஆற்றில் 75 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. பின்பு அது படிப்படியாக நேற்று காலை 1.25 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. இந்த தண்ணீர் வரத்து நெல்லிக்குப்பம் அருகே உள்ள சொர்ணாவூர் தடுப்பணை, விசுவநாதபுரத்தில் உள்ள தடுப்பணை ஆகியவற்றின் மூலம் கணக்கெடுக்கப்படுவதாக கடலூர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்காரணமாக தென்பெண்ணை ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. ஆற்றின் கீழ்மட்டத்தில் இருந்து 25 அடி உயரத்துக்கு தண்ணீர் செல்கிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து 75 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

இந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் புதிய கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சுங்கச்சாவடி சாலை, மேல்பட்டாம்பாக்கம் சாலை, அழகியநத்தம் சாலை தண்ணீரில் மூழ்கியது.

இன்று காலையும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது. இதையடுத்து கடலூர் மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதியில் உள்ள குண்டுசாலை, பெரியகங்கணாங்குப்பம், செம்மண்டலம், குண்டு உப்பலவாடி, கண்டக்காடு, தாழங்குடா, நாணல்மேடு, சுனாமி நகர், எஸ்.என்.சாவடி உள்ளிட்ட 50 இடங்களில் ஆற்று வெள்ள நீர் புகுந்தது.

இந்த தண்ணீர் சுமார் 10 ஆயிரம் வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதி தீவுபோல காணப்பட்டது. அங்குள்ள வீடுகளில் முதல் தளம் வரை தண்ணீர் தேங்கி உள்ளது. எனவே அங்குள்ளவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் ஒன்றியத்துக்குட்பட்ட அழகியநத்தம் முதல் தாழங்குடா வரையில் உள்ள 4 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.



இதனை தொடர்ந்து மீட்பு படையினர் விரைந்து சென்றனர். சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குரிய ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

கடலூர் அருகே பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.



Tags:    

Similar News