செய்திகள்
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம் அருகில் உள்ள அம்மா சாலையில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடும் காட்சி.

கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை

Published On 2021-11-18 09:16 IST   |   Update On 2021-11-18 09:16:00 IST
கடலூர் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் வாகனங்களின் போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டது.
கடலூர்:

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

மேலும் கடலூர் மாவட்டத்துக்கு கனமழை பெய்யும் என்பதை குறிக்கும் வகையில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்து. இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், சிதம்பரம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் முதல் மழை பெய்ய தொடங்கியது.

அதன் பின்னர் லேசாக மழை விட்டு விட்டு தூறிக் கொண்டிருந்தது. அதன் பின்னர் நள்ளிரவில் பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

கடலூர் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் வாகனங்களின் போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டது. சாலைகள் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடக்கியது. இதன் காரணமாக கடலூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆங்காங்கே பொதுமக்கள் குடை பிடித்த படியும் வாகன ஓட்டிகள் சிரமத்துடனும் வாகனங்களில் சென்று வருவதையும் காண முடிந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்புகளை சூழ்ந்து இருந்த மழைநீர் தற்போது தான் வடிந்து பொது மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கவலையடைந்து உள்ளனர்.
Tags:    

Similar News