செய்திகள்
குன்னூரில் படகு சவாரி மேற்கொண்ட சுற்றுலா பயணிகள்.

ஊட்டி, வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்- படகில் பயணம் செய்து உற்சாகம்

Published On 2021-11-06 04:04 GMT   |   Update On 2021-11-06 04:04 GMT
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா உள்ளிட்ட பகுதிகளில், நேற்று மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் திரளாக வந்தனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த சுற்றுலா தலங்கள் கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந்தேதி திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படிப்படியாக வரத் தொடங்கினர். தேனிலவு தம்பதியினரின் வருகையும் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக நீலகிரியில் சுற்றுலாபயணிகள் குவிந்துள்ளனர். அங்குள்ள லாட்ஜ்கள், ஓட்டல்கள், காட்டேஜ்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பி காணப்படுகிறது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா உள்ளிட்ட பகுதிகளில், நேற்று மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் திரளாக வந்தனர். தாவரவியல் பூங்காவுக்கு, கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டனர்.

இதேபோல குன்னூர் சீம்ஸ் பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. குன்னூரில் தோட்டக்கலைத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள சீம்ஸ் பூங்கா இயற்கை சூழலில் அமைந்துள்ளது.

இந்த பூங்காவை சுற்றி உள்ள படகு இல்லம் பசுமையான மலைகள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. சீம்ஸ் பூங்காவில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள் புல்வெளியில் விளையாடியும், படகுகளில் பயணம் செய்தும் பூக்களுக்கு இடையே செல்பி எடுத்தும் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது இதமான இதோஷ்ண நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்களின் முக்கிய இடமாக வால்பாறை உள்ளது. தீபாவளி விடுமுறையை ஒட்டி சுற்றுலாபயணிகள் வருகை நேற்று அதிகம் காணப்பட்டது. வால்பாறையில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வழியில் அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டங்கள் உள்ளன.

இடையிடையே குறுக்கிடும் மித, அடர் வனப்பகுதிகள் பசுமையுடன் கண்ணை கவரும் வகையில் உள்ளன. தற்போது அங்கு நிலவி வரும் காலநிலையால் பனியும், பசுமையும் காண்போர் மனதை கொள்ளை கொள்ள செய்துள்ளது. சோலை வனங்களில் காணப்படும் சிங்கவால் குரங்குகள், காட்டெருமைகள், யானைகளை கண்டு சுற்றுலாபயணிகள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News