செய்திகள்
ஐரிஸ் ரக செடிகளால் ஒருவர் சைக்கிள் ஓட்டி செல்வது போன்று அலங்காரம் செய்யப்பட்டுள்ளதை காணலாம்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் இதயம், வண்ணத்துப்பூச்சி வடிவில் மலர் செடிகள்

Published On 2021-10-25 04:25 GMT   |   Update On 2021-10-25 04:25 GMT
சுற்றுலா பயணிகளை கவர இத்தாலியன் பூங்கா அருகே உள்ள இலை பூங்காவில் ஐரிஸ் ரக செடிகளை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகிறது.
ஊட்டி:

நீலகிரியில் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2-வது சீசன் நடைபெறுகிறது. 2-வது சீசனையொட்டி மலர் மாடத்தில் 12 ஆயிரம் பூந்தொட்டிகளில் மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பூத்து குலுங்கும் மலர்களை கண்டு ரசித்து செல்கின்றனர். பெரணி இல்லம் அருகே 2 ஆயிரம் பூந்தொட்டிகளை கொண்டு வட்டவடிவில் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

இதுதவிர பூங்கா நுழைவு வாயிலில் இருபுறமும் மேரிகோல்டு செடிகளில் மலர்கள் பூத்து குலுங்கின. ஆனால் தொடர் மழை காரணமாக மலர்களில் தண்ணீர் தேங்கியதால் அந்த செடிகள் அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை கவர இத்தாலியன் பூங்கா அருகே உள்ள இலை பூங்காவில் ஐரிஸ் ரக செடிகளை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மயில், வண்ணத்துப்பூச்சி, இதய வடியில் செடிகள் நடவு செய்யப்படுகிறது. பச்சை, நீல நிறத்தில் உள்ள செடிகளை நடவு செய்து வருகிறார்கள். அங்கு 10 ஆயிரம் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இத்தாலியன் பூங்காவில் வளர்ந்த அலங்கார செடிகளை அழகாக வெட்டி ஒருவர் சைக்கிள் ஓட்டி செல்வது போல் 3 வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, மரங்களுக்கு அடியில் மலர் செடிகள் போதிய அளவு வளராது. இதனால் இலை பூங்காவை பயன்படுத்தும் வகையில் இலை செடிகளை கொண்டு அழகுப்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

Tags:    

Similar News