செய்திகள்
வேலூர் இளைஞர்

சைக்கிளிலேயே லடாக்கிற்கு சென்று வேலூர் இளைஞர் சாதனை

Published On 2021-10-06 08:50 IST   |   Update On 2021-10-06 08:50:00 IST
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள லடாக்கிற்கு சென்று வந்த அனுபவம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்று வேலூர் இளைஞர் கூறினார்.
அடுக்கம்பாறை:

வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறையை அடுத்த மூஞ்சூர்பட்டு வடக்கு கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன். இவருடைய மகன் சதீஷ்குமார். இளைஞரான இவர் சைக்கிளிலேயே லடாக்கிற்கு செல்லதிட்டமிட்டார். அதன்படி சைக்கிளிலேயே பயணம் செய்துள்ளார்.

அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி சைக்கிளில் தனது வீட்டில் இருந்து பயணத்தை தொடங்கினார். 34 நாட்கள் சைக்கிளில் பயணம் செய்து கடந்த 2-ந் தேதி மாலை 5 மணி அளவில் லடாக்கிற்கு சென்று சேர்ந்துள்ளார். பயணம் செய்த நாட்களில் தினசரி சுமார் 150 கிலோமீட்டருக்கு மேல் சைக்கிள் ஓட்டி உள்ளார். அப்போது ஆங்காங்கே தங்கி லடாக்கிற்கு சென்று சேர்ந்துள்ளார்.

வேலூரில் இருந்து லடாக் வரை 17 மாநிலங்களை கடந்து, சுமார் 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணங்களின் புகைப்படம் மற்றும் வீடியோவை தனது பேஸ்புக், வாட்ஸ் அப்பில் பதிவிட்டுள்ளார்.

இணையத்தில் இவர் லடாக் சென்ற வீடியோ மற்றும் போட்டோக்கள் வைரலாக பரவுகிறது. சதீஷ்குமாருக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சாதனை படைத்த அவருக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

இது குறித்து சதீஷ்குமார் கூறுகையில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்த இடத்திற்கு சென்று வந்த அனுபவம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்றார்.

Similar News