செய்திகள்
மோப்ப நாய் கொண்டு புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர்

நீலகிரியில் 11வது நாளாக தேடும் பணி- சிங்காராவில் புதரில் பதுங்கிய ஆட்கொல்லி புலி

Published On 2021-10-05 09:16 GMT   |   Update On 2021-10-05 09:16 GMT
வனத்துறையினருக்கு உதவியாக கால்நடைகளை மேய்ப்பதில் அனுபவம் பெற்ற உள்ளூர் இளைஞர்கள் 10 பேரும் இணைந்து புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கூடலூர்:

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதிகளில் 4 பேரை அடித்து கொன்ற புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் கடந்த 10 நாட்களாக வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் ஆட்கொல்லி புலி வனத்துறையினரின் கண்ணில் சிக்காமல் புதர்களுக்குள் பதுங்கி, பதுங்கி வனத்துறையினரிடம் இருந்து தப்பி வருகிறது. இதனால் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகிறார்கள்.

இதற்கிடையே சிங்காரா வனப்பகுதியில் புலி சுற்றி திரிவதாக வந்த தகவலின் பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் சிங்காரா மற்றும் பொக்காபுரம் பகுதிகளில் கால்நடை டாக்டர்கள் மற்றும் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தக்கூடிய துப்பாக்கியுடன் கும்கி யானைகள் மீது அமர்ந்து வனத்திற்குள் சென்று புலியை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். கும்கி யானைகள் உதவியுடன் 4 மணி நேரம் தேடியும் புலியின் இருப்பிடம் தென்படவில்லை.

இந்த நிலையில் மாலையில் சிங்காரா வனப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்குள்ள மூங்கில் புதரில் புலி பதுங்கி இருப்பதை வனத்துறையினர் அறிந்தனர். உடனடியாக வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் மூங்கில் புதரை சுற்றி வளைத்தனர். ஆனால் அதிகமான புதர் காரணமாக மயக்க ஊசி செலுத்த முடியவில்லை.

ஆட்கள் நடமாட்டம் இருப்பதை அறிந்ததும் புலி வெளியில் வராமல், புதர்களுக்குள்ளேயே பதுங்கி, பதுங்கி தப்பியோடியது.

தொடர்ந்து இன்று 11-வது நாளாக வனத்துறையினர், அதிரடிப்படையினர், கால்நடை டாக்டர்கள் மயக்க ஊசி, துப்பாக்கியுடன் சிங்காரா வனப்பகுதிக்குள் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். தற்போது புலி இருக்கும் இடத்தை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். அவர்களுடன் கும்கி யானைகள், மோப்ப நாய்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.

வனத்துறையினருக்கு உதவியாக கால்நடைகளை மேய்ப்பதில் அனுபவம் பெற்ற உள்ளூர் இளைஞர்கள் 10 பேரும் இணைந்து புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

புலி நிமிடத்திற்கு நிமிடம் ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு வேகமாக தப்பி சென்று கொண்டிருப்பதால் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. தற்போது புலி இருக்கும் இடத்தை கண்டு பிடித்து விட்டதாகவும், அதனை விரைவில் மயக்க ஊசி செலுத்தி பிடித்து விடுவோம் என வனத்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே இன்று காலை சிங்காரா வனப்பகுதியில் புலியை தேடுதல் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது வனத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த எருமை மாடு ஒன்றை புலி அடித்து கொன்றது மட்டுமில்லாமல் அதனை தின்று சென்றுள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தெரியவந்ததும் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள்ளாகவே அங்கிருந்து சென்று விட்டது. தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது.



Tags:    

Similar News