செய்திகள்
சேற்றில் சிக்கி குட்டி யானை இறந்து கிடப்பதையும், அதனை சுற்றி 4 யானைகள் காவல் நிற்பதையும் காணலாம்

பந்தலூர் அருகே சேற்றில் சிக்கி குட்டி யானை உயிரிழப்பு

Published On 2021-10-02 16:00 IST   |   Update On 2021-10-02 16:00:00 IST
குட்டி யானையின் உடலை நெருங்க விடாமல் அதனை சுற்றி தாய் யானை உள்பட 4 யானைகள் நின்று பாச போராட்டம் நடத்தி வருகின்றன.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்குபட்ட அய்யன்கொல்லி அருகே உள்ளது மழவன் சேரம்பாடி பகுதி. இந்த பகுதியை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்குள்ள மக்கள் விவசாய வேலை செய்து வருகின்றனர்.

அருகே வனப்பகுதி உள்ளதால் அடிக்கடி கிராமத்திற்குள் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து பயிர்களையும், பொருட்களை சேதப்படுத்துவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று அதிகாலை மழவன் சேரம்பாடி கிராமத்தையொட்டிய வயல் பகுதிக்குள் இருந்து யானைகள் பிளிறும் சத்தம் கேட்டது. தொடர்ந்து யானை பிளிறும் சத்தம் அதிகரிக்கவே அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். உடனடியாக சத்தம் வந்த இடத்திற்கு சென்று பார்த்தனர்.

அப்போது வயல் பகுதி அருகே உள்ள சேற்றுக்குள் குட்டி யானை ஒன்று சிக்கி இறந்த நிலையில் கிடந்தது. அதனை சுற்றிலும் தாய் யானை உள்பட 4 யானைகள் நின்று பிளிறி கொண்டு இருந்தன.

இதை பார்த்ததும் பொதுமக்கள் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் குட்டி யானையின் உடலை மீட்பதற்காக வனத்துறையினர் அருகே செல்ல முயன்றனர். ஆனால் தாய் யானை வனத்துறையினரை நோக்கி வந்தது. இதனால் அவர்கள் சற்று பின்வாங்கினர்.

தொடர்ந்து குட்டி யானையின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் குட்டி யானையின் உடலை நெருங்க விடாமல் அதனை சுற்றி தாய் யானை உள்பட 4 யானைகள் நின்று பாச போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் குட்டி யானையின் உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறையினர் அந்த யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.




Similar News