செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு நின்று புதுமண ஜோடிகள் வழிபட்ட காட்சி.

திருவண்ணாமலை கோவில் முன்பு நின்று வழிபட்ட புதுமண ஜோடிகள்

Published On 2021-08-20 11:33 IST   |   Update On 2021-08-20 11:33:00 IST
இன்று ஆவணி மாத சுபமுகூர்த்த தினம் என்பதால் நேற்று முதல் திருவண்ணாமலையில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் 3 நாட்கள் மூடப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை முதல் நேற்றுவரை 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

இந்தநிலையில் தமிழக அரசு உத்தரவுப்படி வாரத்தில் மூன்று நாட்கள் அருணாசலேஸ்வரர் கோவில் மூடப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று (20-ந்தேதி) முதல் வருகிற 22-ம் தேதி வரை 3 நாட்கள் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

இன்று ஆவணி மாத சுபமுகூர்த்த தினம் என்பதால் நேற்று முதல் திருவண்ணாமலையில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. நேற்று இரவில் அலங்கார வாகனத்தில் மாப்பிள்ளை ஊர்வலம், கோவில்களில் மணமகள் உறவினர்கள் வழிபாடு செய்தல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

50-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களில் இன்று காலை திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருமண நிகழ்ச்சிக்கு வந்த வெளியூர் மக்கள் நேற்றே பலர் சாமி தரிசனம் செய்தனர்.

இன்று நடை சாத்தப்பட்டிருந்தது. வெளியூர் மக்கள் அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

அவர்கள் கோவில் வெளியே ராஜகோபுரம் முன்பு நின்று தரிசனம் செய்தனர். இதேபோல் ஏராளமான புதுமண ஜோடிகளும் கோவில் முன்பு நின்று வழிபட்டனர்.

இன்று காலை கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் இன்று வரலட்சுமி விரதம் என்பதால் அதற்கான பூஜை பொருட்களை வாங்கவும் பொதுமக்கள் குவிந்தனர்.

இன்று மாலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல சிவாலயங்களில் பிரதோ‌ஷ வழிபாடுகள் நடைபெற உள்ளது.

Similar News