செய்திகள்
எலிகள் குடித்ததால் காலியாகி கிடந்த ஒயின் பாட்டில்கள்

கூடலூர் அருகே டாஸ்மாக் கடையில் ஒயின் குடித்த எலிகள்

Published On 2021-07-06 08:51 IST   |   Update On 2021-07-06 17:42:00 IST
ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால், மது கிடைக்காமல் மதுப்பிரியர்கள் திணறி வந்த நிலையில், பூட்டிய கடைக்குள் சத்தமே இன்றி ஒயினை குடித்து எலிகள் கும்மாளமிட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கூடலூர்: 

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் மதுப்பிரியர்கள் திண்டாடி வந்தனர். 

இதையடுத்து கொரோனா பரவல் குறைந்து வந்ததால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதையொட்டி காலையிலேயே கடைகளுக்கு வந்து சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கூடலூர் அருகே காளம்புழா பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை திறக்க சுமார் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று காலை 10 மணிக்கு மேற்பார்வையாளர் செந்தில்குமார், விற்பனையாளர் நித்தியானந்தன் மற்றும் ஊழியர்கள் வந்தனர். பின்னர் கடையை திறந்து, அங்குள்ள மதுபாட்டில்களை சரிபார்த்தனர்.

அப்போது குவாட்டர் அளவு கொண்ட 12 ஒயின் பாட்டில்கள் காலியாக கிடந்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், அந்த பாட்டில்களை எடுத்து ஆய்வு செய்தனர். அப்போது பாட்டில்களின் மேல்பக்கம் இருந்த ஈயத்தால் ஆன மூடியில் துளையிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது:-

இந்த டாஸ்மாக் கடையில் ஏற்கனவே எலிகள் நடமாட்டம் இருந்து வந்தது. எனவே பாட்டில்களின் மூடிகளை எலிகள் கடித்து துளையிட்டு, அதில் இருந்த ஒயினை குடித்து இருக்கலாம். அவை குடித்தது போக மீதமுள்ளவை கீழே கொட்டி வீணாகி இருக்கலாம். அவற்றின் மதிப்பு ரூ.1,680 ஆகும்.

மேலும் அந்த எலிகள் மது குடித்து பழகிவிட்டதால், மீண்டும் அட்டகாசம் செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே உயர் அதிகாரிகளின் ஆலோசனையின்பேரில் மதுபாட்டில்களை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

Similar News