செய்திகள்
கவுந்தப்பாடி அருகே உள்ள ஓடத்துறை ஊராட்சி எல்லையில் தடுப்பு அமைக்கப்பட்டு உள்ள காட்சி.

தொற்று பாதித்தவர்கள் வெளியே சுற்றுவதால் கிராமங்களில் பரவும் கொரோனா

Published On 2021-06-09 06:29 GMT   |   Update On 2021-06-09 06:30 GMT
கிராமப்புற பகுதிகளில் மக்கள் இன்னும் அலட்சியமாக இருந்து வருகின்றனர். காய்ச்சல், சளி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லாமல் அருகில் இருக்கும் மருந்து கடைகளில் மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களுக்கு போட்டியாக ஈரோட்டில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழக அரசின் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது.

இதனால் தினசரி பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வந்த சென்னை தற்போது 3-ம் இடம் சென்றுள்ளது. ஆனால் அதே சமயம் ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து தினசரி பாதிப்பு அதிகரித்து வந்ததால் கடந்த சில நாட்களாக 2-ம் இடம் பிடித்து வருகிறது.

நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தின் மேலும் 1,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 69 ஆயிரத்து 485 ஆக உயர்ந்துள்ளது. இன்றைக்குள் 70 ஆயிரத்தை கடந்து விடும்.

ஒரே நாளில் 2,003 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 54 ஆயிரத்து 742 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 459 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாவட்டம் முழுவதும் 14,284 கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முதலில் மாநகர் பகுதியில் அதிகமாக பரவிய தொற்று தற்போது கிராமப்புற பகுதியில் கொத்துக்கொத்தாக பரவி வருகிறது.

கிராமப்புற பகுதிகளில் மக்கள் இன்னும் அலட்சியமாக இருந்து வருகின்றனர். காய்ச்சல், சளி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லாமல் அருகில் இருக்கும் மருந்து கடைகளில் மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். இதனால் தற்காலிகமாக காய்ச்சல், சளி சரியானாலும் அடுத்த ஒரு வாரத்தில் மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் சில நேரங்களில் அவர்களைக் காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. இது போக காய்ச்சல், சளி போன்ற அறிகுறி உள்ளவர்கள், கொரோனா பரிசோதனை கொடுத்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வெளியில் மற்றவர்களுடன் சர்வசாதாரணமாக நடமாடுகின்றனர். இதனால் நோய்தொற்று வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் கவுந்தப்பாடி ஓடத்துறை ஊராட்சிக்குட்பட்ட பனங்காட்டூர், பட்டையக்காளிபாளையம், சூரியம்பாளையம், பாலப்பாளையம், கோவில்பாளையம், நஞ்ச கவுண்டன்பாளையம், மேற்கு காலனி உட்பட 18 கிராமங்கள் உள்ளது.

இந்த கிராமங்களில் 10 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்கள் இங்கு அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் வெளியூர் வேலைக்கு சென்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஆனால் அவர்கள் வீட்டில் தனிமையில் இல்லாமல் ஊர் சுற்றியதால் தொற்று வேகமாக பரவியது. இதையடுத்து அந்த பகுதிகளுக்கு கலெக்டர் கதிரவன் சென்று ஆய்வு மேற்கொண்டார். வீட்டில் தனிமையில் இல்லாதவர்களை மருத்துவ மனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தார். அதைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் முதலில் 50 பேருக்கு தொற்று உறுதியானது.

இதையடுத்து ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் ஒரு சிலர் மருத்துவமனையிலும், ஒரு சிலர் வீடுகளிலும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அனைத்தும் தடுப்புகள் அமைத்து அடைக்கப்பட்டு போலீசார், வருவாய்த் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் இந்த பகுதியில் மருத்துவ குழுவினரும் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். இதேபோல் சத்தியமங்கலம், அந்தியூர், பவானி, கோபி போன்ற தாலுகா பகுதியில் உள்ள கிராமங்களிலும் தொற்று தற்போது அதிகரித்து வருகிறது.

Tags:    

Similar News