செய்திகள்
குழந்தைகள் தேஜஸ், தனுஜ்மோகனுடன் தாய் வித்யா

லத்தேரி பட்டாசு கடை விபத்தில் பலியான 2 சிறுவர்களின் தாய் ரெயிலில் பாய்ந்து தற்கொலை

Published On 2021-04-21 06:31 GMT   |   Update On 2021-04-21 06:31 GMT
பட்டாசு வெடி விபத்தால் தந்தை, குழந்தைகளை இழந்த பெண் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியை சேர்ந்த மோகன் ரெட்டி (வயது60). லத்தேரி பஸ் நிலையத்தில் பட்டாசுக்கடை நடத்தி வந்தார். மாடு விடும் விழாவிற்காக காளை வளர்ப்பதிலும் ஆர்வம் கொண்டவர்.

அந்த பகுதியில் நடைபெறும் எருது விடும் விழாக்களில் மோகன் ரெட்டி காளை வருகிறது என்று அறிவித்தால் அதிக ஆரவாரம் செய்வார்கள். மோகன் ரெட்டியின் மகள்கள் வித்யா (வயது33), திவ்யா.

வித்யாவிற்கு சுரேஷ் என்பவருடன் திருமணமானமானது. இவருடைய மகன்கள் தேஜஸ் (8) தனுஜ்மோகன் (6). கருத்து வேறுபாடு காரணமாக வித்யா கணவரை பிரிந்தார். இதனையடுத்து தனது மகன்களுடன் தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 18-ந்தேதி மோகன் ரெட்டி தன்னுடைய பேரப் பிள்ளைகளான தேஜஸ், தனுஜ்மோகன் ஆகியோருடன் கடையில் இருந்தார். மதியம் 12 மணி அளவில் கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் பட்டாசை வெடித்து காண்பிக்கச்சொன்னதால் மோகன் பட்டாசை வெடித்துள்ளார்.

அதில் ஏற்பட்ட தீ பொறி கடையில் உள்ள பட்டாசுகள் மீது விழுந்து வெடித்தது. அப்போது மோகனின் பேரன்கள் தேஜஸ், தனுஜ்மோகன் பயந்து கடைக்குள் ஓடினர். பேரன்களை காப்பாற்ற முயன்ற போது மோகனும் கடைக்குள் சிக்கினார். அதற்குள் பட்டாசுகள் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டதால் மோகன் ரெட்டி மற்றும் 2 சிறுவர்கள் பரிதாபமாக இறந்தனர்.

இந்நிலையில் இறந்த சிறுவர்களின் தாய் வித்யா மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். கணவரும் பிரிந்து சென்றுவிட்டார். தந்தை, மகன்களும் இறந்து விட்டனர். இதனால் வித்யா கடும் சோகத்திலும் விரக்தியிலும் இருந்துள்ளார்.

வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் இன்று அதிகாலை 3 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றார். அந்த பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் சென்ற அவர் வேகமாக வந்த ஒரு ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். வித்யா வீட்டில் இல்லாததால் பதற்றமான உறவினர்கள் அவரை தேடினர்.

அப்போது லத்தேரி ரெயில் நிலையம் அருகே பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக பொது மக்கள் கூறினர். உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது இறந்துகிடந்தது வித்யா என தெரியவந்தது. அவருடைய உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டாசு வெடி விபத்தால் தந்தை, குழந்தைகளை இழந்த பெண் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News