செய்திகள்
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா

நீலகிரிக்கு வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்

Published On 2021-04-10 04:46 GMT   |   Update On 2021-04-10 04:46 GMT
தமிழக அரசு தெரிவித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர்.
ஊட்டி:

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான நீலகிரிக்கு கோடைகாலத்தையொட்டி சமவெளி பகுதி, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் ஆண்டுதோறும் குவிவது வழக்கம். கொரோனா தொற்றால் கடந்த ஆண்டு சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. பின்னர் அரசு தளர்வுகள் அளித்தாலும் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு நீலகிரிக்கு வருவதற்கு இ-பாஸ், இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டு மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கேரளாவில் கொரோனா பரவ தொடங்கியதை அடுத்து கேரளா மற்றும் புதுச்சேரியில் இருந்து வரும் அனைவருக்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.



இதையடுத்து நீலகிரி மாவட்டத்திற்கு இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் இருந்து வரும் அனைவருக்கும் இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இ-பாஸ் வைத்திருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இ-பாஸ் வாங்கி வருபவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் கட்டுப்பாட்டு பகுதிகளில் போலீஸ், உள்ளாட்சி ஊழியர் மற்றும் தன்னார்வலர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தமிழக அரசு தெரிவித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர். அவர்கள் கூட்டம் கூடாமலும், அதிக நேரம் நிற்காமலும் ஒரே வழியில் சென்று திரும்ப வழிவகை செய்யப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News