தேர்தல் விழிப்புணர்வு, வாக்குச்சாவடிகளில் முன்னேற்பாடு பணிகள்- மலை கிராமங்களுக்கு பைக்கில் சென்று கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியம் குட்டகரை, புளியாங்குப்பம் மலை கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்தீப் நந்தூரி நேரில் சென்று பார்வையிட்டார்.
குட்டக்கரை மலை கிராமத்திற்கு சென்று கிராம வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டார். அங்கு சாய்வு தளம், குடிநீர், கழிவறை, மின்சாரம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து நம்மியம்பட்டு ஊராட்சி புளியாங்குப்பம் மலை கிராமத்திற்கு காரில் செல்ல முடியாததால் பைக்கில் 3 கி.மீ. தூரம் செங்குத்தான மலைப் பாதையில் பயணம் செய்து மலைக்கிராம வாக்குச்சாவடி மையத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அத்திப்பட்டில் 100 சதவீத வாக்களிக்க வலியுறுத்தி மகளிர் குழுவினர் இந்தியா வரைபடத்தில் பச்சை மிளகாய் கொண்டு விழிப்புணர்வு கோலம் வரைந்திருந்தனர். அதை கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.
பின்னர் ஜமுனாமரத்தூர் தாலுகா அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது சம்பந்தமாக செயல்விளக்கம் அளித்தார்.
ஜவ்வாது மலை மலையில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களால் வரையப்பட்ட வண்ணக் கோலத்தில் கையெழுத்திட்டு தேர்தல் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். மேலும் அரிசியில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வரையப்பட்ட ஓவியத்தை பார்வையிட்டார்.
பின்னர் ஜமுனாமரத்தூர் பஸ் நிலையத்திலிருந்து தேர்தல் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.
இதில் மகளிர் திட்டம் இயக்குனர் சந்திரா, உதவி கலெக்டர் (பயிற்சி) அமித்குமார், துணை கலெக்டர் (பயிற்சி) அஜிதா பேகம் மற்றும் தேர்தல் அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.