செய்திகள்
கைது

போலீஸ் அதிரடி நடவடிக்கை- கடலூர் மாவட்டத்தில் மேலும் 40 ரவுடிகள் கைது

Published On 2021-03-03 04:57 GMT   |   Update On 2021-03-03 04:57 GMT
கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு 40 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் 50 ரவுடிகளை போலீசார் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடலூர்:

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடை பெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சட்டசபை தேர்தல் அறிவிப்பையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் உள்ள ரவுடிகளை கைது செய்யுமாறு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டார்.

அதன்பேரில் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட 5 கோட்டங்களுக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ள 40 ரவுடிகளை போலீசார் கைது செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று இரவு 40 ரவுடிகளையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் 50 ரவுடிகளை போலீசார் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சட்டசபை தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக போலீசாரின் தீவிர கண்காணிப்பு பணிகள் மற்றும் ரவுடிகளை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News