செய்திகள்
விவசாயிகள் மின் கோபுரம் மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல்

விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

Published On 2021-02-21 09:46 GMT   |   Update On 2021-02-21 09:46 GMT
விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பள்ளத்தில் குதித்து, டவரில் ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று அச்சமடைந்துளள விவசாயிகள் இந்த திட்டத்தை கைவிட கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை அடுத்த மங்கலம் மேல் பாலானந்தல் கிராமத்தில் நேற்று பவர்கிரிட் நிறுவனத்தினர் விளைநிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்க லாரிகளில் பொருட்களை கொண்டு சென்றனர். அங்கு விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மின் கோபுரம் அமைக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விளைநிலங்களில் திரண்டு நின்று மின்கம்பங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் திட்டமிட்டபடி மின் கோபுரங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால் ஆவேசமடைந்த விவசாயிகள் அசோக்குமார், அவரது தாய் சரசு, உறவினர்கள் வேலாயுதம், மணிவண்ணன் ஆகியோர் அந்தப் பகுதியில் ஏற்கனவே அமைத்திருந்த உயர் மின் கோபுரத்தின் மீது ஏறி விவசாய நிலத்தில் மின் கோபுரம் அமைத்தால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து மங்கலம் போலீசார் மற்றும் பவர்கிரிட் நிறுவன ஊழியர்கள் விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்னர் மின்கம்பங்களை ஏற்றி வந்த லாரியில் திருப்பி அனுப்பினர் . இந்த போராட்டம் காரணமாக சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு மின் கோபுரங்களில் இருந்து விவசாயிகள் கீழே இறங்கினர்.

இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த காட்டுமலையனூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்தம்(வயது53) என்ற பெண்ணுக்கு சொந்தமான விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது.

இந்த நிலத்தில் பவர் கிரிட் நிறுவனம் சார்பில் உயர் மின் கோபுரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான உரிய இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கான இழப்பீடு வழங்காமல் வேட்டவலம் போலீசார் பாதுகாப்புடன் லட்சுமி காந்தம் நிலத்திற்கு சென்றனர்.

அங்கு அனுமதி பெறாமல் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் லட்சுமிகாந்தம் சம்பவ இடத்திற்கு சென்று இழப்பீடு வழங்காமல் ஏன் பணியை தொடங்குகிறீர்கள்? என கேட்டார் .ஆனால் அதிகாரிகள் உரிய பதில் கூறாமல் பணியை தொடர்ந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த லட்சுமிகாந்தம் விவசாயநிலத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் குதித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .

இதையடுத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் . அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அவர்கள் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அதன்பின்னரே லட்சுமிகாந்தம் பள்ளத்தில் இருந்து வெளியில் வந்தார்.

இதனால் அங்கு பரபரப்பாக சூழ்நிலை ஏற்பட்டது.

Tags:    

Similar News