செய்திகள்
சானிட்டரி நாப்கின் எந்திரத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் வழங்கி தொடங்கி வைத்த காட்சி.

தமிழகத்தில் முதல் முறையாக கடலூரில் அறிமுகம்: 65 போலீஸ் நிலையங்களில் சானிட்டரி நாப்கின் எந்திரம்

Published On 2021-02-17 08:09 IST   |   Update On 2021-02-17 08:09:00 IST
கடலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசார், அதிகாரிகள் பயன்படுத்துவதற்காக சானிட்டரி நாப்கின் எந்திரத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் வழங்கி தொடங்கி வைத்தார்.
கடலூர்:

கடலூர் மாவட்ட பெண் போலீசார், பெண் அதிகாரிகள் பாதுகாப்பு மற்றும் பணியின் போது ஏற்படும் உடல், மன ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், அவர்கள் பயன்படுத்தும் வகையில் சானிட்டரி நாப்கின் வெண்டிங் எந்திரத்தை அறிமுகம் செய்ய போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் முடிவு செய்தார்.

இதற்காக தனியார் நிறுவனங்கள் உதவியுடன் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஆயுதப்படை பிரிவு, மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்பட அனைத்து போலீஸ் நிலையங்கள் என 65 இடங்களில் இந்த எந்திரங்கள் வைக்கப்பட்டது.

அதன்படி கடலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசார், அதிகாரிகள் பயன்படுத்துவதற்காக சானிட்டரி நாப்கின் எந்திரத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் வழங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பெண் போலீசார், அதிகாரிகள், அந்த எந்திரத்தில் 5 ரூபாய் நாணயத்தை போட்டு சானிட்டரி நாப்கின் எடுத்துக்கொண்டனர்.

இதையடுத்து அனைத்து போலீஸ் நிலையங்களில் வைக்கப்பட்ட எந்திரங்களும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் முதல் முறையாக கடலூர் மாவட்டத்தில் பெண் காவலர்கள், அதிகாரிகள் நலனை கருத்தில் கொண்டு இந்த எந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் நிலையங்களில் பணியின் போது, இந்த எந்திரத்தில் உள்ள நாப்கினை குறைந்த கட்டணத்தில் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். இதேபோல் பாதுகாப்புக்காக வெளியில் செல்லும் போது நடமாடும் கழிவறை வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்த வாகனத்திலும் சானிட்டரி நாப்கின் எந்திரம் பொருத்தப்பட்டு உள்ளது. இதை பெண் போலீசார், அதிகாரிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.

Similar News