செய்திகள்
நந்தினி, புவனேஸ்வரி, வினோதினி

குளத்தில் மூழ்கி இரட்டை குழந்தைகள் உள்பட 6 பேர் பலி

Published On 2021-01-27 02:10 GMT   |   Update On 2021-01-27 02:10 GMT
குளத்தில் மூழ்கி இரட்டை குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இதனால் 2 கிராமங்கள் சோகத்தில் மூழ்கின.
கடலூர்:

கடலூர் மாவட்டம் இலங்கியனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு 4 வயதில் விக்னேஸ்வரன், சர்வேஸ்வரன் என இரட்டை குழந்தைகள் இருந்தனர்.

இந்த நிலையில் மணிமேகலை தனது குழந்தைகளுடன் திருப்பெயர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்திருந்தார். மணிமேகலையை பார்ப்பதற்காக அந்த கிராமத்தில் வசித்து வரும் அவரது சகோதரி மல்லிகா தனது 4 வயது மகன் விவேகனுடன் பாட்டி வீட்டு வந்திருந்தார்.

நேற்று முன்தினம் மாலை விவேகன், விக்னேஸ்வரன், சர்வேஸ்வரன் ஆகிய 3 சிறுவர்களும் அங்குள்ள குளத்திற்கு அருகே விளையாடிய போது துரதிருஷ்டவசமாக குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர். நேற்று குளத்திற்குள் இருந்து தீயணைப்பு வீரர்கள் சிறுவர்கள் 3 பேரின் உடல்களையும் மீட்டு வெளியே கொண்டுவந்தனர். இதை பார்த்து அவர்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இதேபோல் பண்ருட்டி அருகே மற்றொரு துயரசம்பவம் நடந்துள்ளது.

பண்ருட்டி அருகே உள்ள ஏ.புதூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் லட்சபூபதி. காய்கறி வியாபாரி. இவரது மகள்கள் நந்தினி(18), வினோதினி(17). அதே பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் மகள் புவனேஸ்வரி (20).

இதில் வடலூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வினோதினி பிளஸ்-2-வும், நந்தினி வடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாமாண்டும் படித்து வந்தனர். புவனேஸ்வரி குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. இறுதியாண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள கன்னியம்மன் கோவிலில் கன்னிவிடு திருவிழாவையொட்டி நேற்று சாமிக்கு அங்குள்ள குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. திருவிழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு குளத்தில் நீராடினர். மாணவிகள் நந்தினி, வினோதினி, புவனேஸ்வரி ஆகியோரும் குளத்தில் இறங்கி நீராடினர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக மாணவிகள் 3 பேரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

குளத்தில் மூழ்கி இரட்டை குழந்தைகள் உள்பட 6 பேர் பலியான சம்பவங்களால் மேற்படி இரு கிராமங்களும் சோகத்தில் மூழ்கின.
Tags:    

Similar News