செய்திகள்
கைது

வருமான வரித்துறை அதிகாரி எனக்கூறி வாலிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய உறவினர் கைது

Published On 2020-11-13 09:27 IST   |   Update On 2020-11-13 09:27:00 IST
வருமான வரித்துறை அதிகாரி எனக்கூறி வாலிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய உறவினர் கைது செய்யப்பட்டார்.
வேலூர்:

வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர் நிவாஸ். இவர், வேலூர் மக்கானில் இரும்புக்கம்பிகள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவரது மகன் முகம்மது பாஷா என்கிற நிவாஸ் (வயது 30). இவர், சம்பவத்தன்று கடையில் இருந்தபோது அவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்மநபர் தான் வருமான வரித்துறையைச் சேர்ந்த அதிகாரி என்று அறிமுகப்படுத்தினார். மேலும் அவர் எனக்கு ரூ.1 கோடி தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதைக் கண்டு கொள்ளாத முகம்மதுபாஷா இணைப்பை துண்டித்துள்ளார். அதைத்தொடர்ந்து பிற்பகலில் அவருக்கு மீண்டும் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய அந்த நபர், தான் கேட்டபடி ரூ.1 கோடி தரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முகம்மது பாஷா வேலூர் வடக்குப் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், செல்போனில் மிரட்டியது சத்துவாச்சாரியைச் சேர்ந்த அவரது உறவினரான தமீம் (50) என்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது தமீம், தான் விளையாட்டுக்காக போன் செய்து மிரட்டியதாகக் கூறினார். எனினும் விசாரணையில், முகம்மது பாஷாவுக்கும், தமீமுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் தமீமை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். இந்தச் சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News