செய்திகள்
விபத்து

கிருஷ்ணகிரி அருகே வாகனம் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

Published On 2020-11-12 12:48 IST   |   Update On 2020-11-12 12:48:00 IST
கிருஷ்ணகிரி அருகே வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கர்நாடகா மாநிலம் பெங்களூர் மெஜஸ்டிக் லட்சுமணபுரி பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாத். இவரது மகன் பால் எபினேசர் (வயது22). இவரது நண்பர்கள் பெங்களூர் கத்ரகுப்பே பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் பாபு (20), சந்திரசேகர் மகன் புனித்பாபு (18) இவர்கள் அனைவரும் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தனர்.
மற்றொரு நண்பரான காட்டன்பேட் பகுதியில் பிரிண்டிங் பிரசில் வேலை செய்யும் லட்சுமணபுரி காந்திநகர் பகுதியை சேர்ந்த கமலேசன் (19).

இவர்கள் 4 பேரும் இரண்டு இருசக்கர வாகனத்தில் சென்னையில் உள்ள பால்எபினேசரின் உறவினர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க பெங்களூரில் இருந்து நேற்று இரவில் புறப்பட்டுள்ளனர்.

இதில் பால்எபினேசர், பாபு ஆகியோர் ஒரு வாகனத்திலும், புனித்பாபு, கமலேசன் ஆகியோர் ஒரு வாகனத்திலும் வந்துள்ளார்கள்.

கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒரப்பம் அருகே உள்ள வெத்தலைதோட்டம் என்ற இடத்தில் நள்ளிரவு 2.30 மணிக்கு சென்று கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது பால்எபினேசர், பாபு சென்ற இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியுள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.

இது குறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்ப டுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News