செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா 2வது அலை?- சுகாதாரத்துறையினர் விளக்கம்

Published On 2020-10-28 03:42 GMT   |   Update On 2020-10-28 03:42 GMT
கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை உருவாகி விட்டதா? என்பதற்கு சுகாதாரத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
கடலூர்:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை விட பாதிப்பு அதிகரித்தபடி உள்ளது. நேற்று முன்தினம் வரை கொரோனாவால் 22 ஆயிரத்து 997 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். 267 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சானிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்த வேண்டும். தேவையின்றி வெளியே சுற்றித்திரிவதை தடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். அரசு தளர்வுகளை தான் அறிவித்து உள்ளது. ஆனால் கொரோனா நோய் தொற்று குறைந்து விட்டதாக நினைத்து பொதுமக்கள் சுதந்திரமாக உலா வருகின்றனர்.

திருமணம், பிறந்த நாள் விழா, துக்க நிகழ்ச்சிகளில் அதிக அளவில் கூட்டம் கூடுவதை பார்க்க முடிகிறது. இதன் மூலம் மேலும் தொற்று பரவும் ஆபத்து உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் கொரோனா 2-வது அலை உருவாக வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி சுகாதாரத்துறையினர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. ஆரம்ப காலத்தில் அதிக பாதிப்பு இருந்தது. தற்போது 50-க்கும் குறைவான பாதிப்பு தான் உள்ளது. இருப்பினும் இது நிரந்தரம் இல்லை. தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந்தேதி வருகிறது. இதனால் தற்போதே கடைகளில் கூட்டம் அதிகமாக கூடுவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக ஜவுளிக்கடை, நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. ஏ.சி. பயன்பாடும் அதிகமாக உள்ளதால் நோய் தொற்று அதிகம் ஏற்பட்டு, கொரோனா 2-வது அலைக்கு வாய்ப்பு ஏற்படும் நிலை உள்ளது.

மருந்து கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதை தவிர்க்க வேண்டும். வணிக நிறுவனங்களில் நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே வர வேண்டும் என்று அறிவிக்க வேண்டும். பெரிய வர்த்தக நிறுவனங்கள் முன்பு அரசு சார்பில் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். வாடிக்கையாளர்களுக்கு துணி பை, முக கவசங்களை கட்டாயம் வணிக நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

அதேபோல் கொரோனா 2-வது அலை உருவாதை தடுக்கும் பொறுப்பு பொதுமக்களிடமும் உள்ளது. பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பிறந்த நாள், துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கு தான் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. ஆகவே இது போன்ற நிகழ்ச்சிகளில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் பேருக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை முடிவுகளை அறிவித்து வருகிறோம் என்றனர்.
Tags:    

Similar News