செய்திகள்
நீட் தேர்வு

20 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு- நெல்லை, தென்காசியில் 7,460 பேர் தேர்வு எழுதினர்

Published On 2020-09-13 09:20 GMT   |   Update On 2020-09-13 09:20 GMT
நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்றது. நெல்லை மற்றும் தென்காசியில் 20 மையங்களில் நடைபெற்ற தேர்வை 7,460 பேர் எழுதினர்.
நெல்லை:

நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்று நடைபெற்றது. இதற்காக தேர்வு மையங்களில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

நெல்லை மாவட்டத்தில் 17 பள்ளிகளும், தென்காசி மாவட்டத்தில் 3 பள்ளிகளும் தேர்வு மையங்களாக செயல்பட்டது. தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

இந்த 20 தேர்வு மையங்களில் மொத்தம் 7,460 பேர் தேர்வு எழுதினர். இதில் நெல்லை மாவட்டத்தில் 6,792 பேரும், தென்காசி மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களில் 668 பேரும் தேர்வு எழுதினர்.

இதனையொட்டி தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும், மாணவர்களுக்கு கூடுதல் பேருந்து வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது. தேர்வு எழுதும் மாணவர்கள் 30 நிமிடங்களுக்கு முன்னதாக தேர்வறைக்கு வந்தனர். ஒரு நிமிடம் தாமதித்தாலும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அரசு அறிவுறுத்தி இருந்தது.

இதனால் மாணவர்கள் காலை 10.30 மணி முதலே தேர்வறைக்கு வர தொடங்கினர். அவர்கள் முக கவசம் அணிந்தபடியும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் வந்தனர். அவர்கள் அனைவரது ஹால் டிக்கெட்டையும் பரிசோதித்த பிறகே மாணவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அரசு அறிவித்தபடி கட்டுப்பாடான உடைகள் அணிந்த மாணவர்கள் மட்டுமே தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவிகள் கம்மல், பெரிய டாலர் வைத்த செயின், ஷூ உள்ளிட்டவை அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. மாணவிகள் அவற்றை தங்களது பெற்றோரிடம் கழட்டி கொடுத்துவிட்டு சென்றனர். செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

கடுமையான கட்டுப்பாடுகளுடன், நீண்ட வரிசைகளில் நின்றபடி மாணவர்கள் அனைவரும் சோதனைக்கு பிறகே தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். நெல்லை, தென்காசியில் அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முக கவசம் அணியாமல் வந்த மாணவர்களுக்கு தேர்வு மையத்தில் இருந்த அதிகாரிகள் முக கவசம் வழங்கி, பின்னர் தேர்வறைக்கு அனுப்பி வைத்தனர்.

தேர்வு எழுத வந்தவர்கள் தவிர மாணவர்களின் பெற்றோர் உள்பட வேறு யாரும் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. மாணவர்கள் தேர்வு அறைக்குள் நுழையும் முன்பு கைகளை நன்றாக கழுவ சானிடைசர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேர்வறை கண்காணிப்பாளர்களாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஒரு அறையில் 20 மாணவர்கள், ஒரு கண்காணிப்பாளர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News