செய்திகள்
போலீசார் விசாரணை

500 ரூபாய் கொடுத்தால் அரைமணி நேரத்தில் இ-பாஸ்: டிராவல்ஸ் உரிமையாளரிடம் விசாரணை

Published On 2020-08-05 02:47 GMT   |   Update On 2020-08-05 02:47 GMT
கடலூரில் 500 ரூபாய் கொடுத்தால் அரைமணி நேரத்தில் இ-பாஸ் கிடைக்கும் என்று சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியிட்ட டிராவல்ஸ் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கொரோனா பரவி வருவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல வேண்டுமானால் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதுவும் திருமணம், இறப்பு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பலர் அத்தியாவசிய தேவைகளுக்காக இ-பாஸ் பெற்று, மற்ற மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக சமீபத்தில் புகார் கூறப்பட்டது.

இந்நிலையில் கடலூரில் அரைமணி நேரத்தில் இ-பாஸ் பெற்று தரப்படும். அதற்காக சேவை கட்டணமாக ரூ.500 வசூலித்து வருவதாக டிராவல்ஸ் உரிமையாளர் ஒருவர் பேசிய ஆடியோ வாட்ஸ்-அப், முக நூல் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த ஆடியோவில் டிராவல்ஸ் உரிமையாளர் பேசியதாவது:-

கடலூரை சேர்ந்த எங்கள் டிராவல்ஸ் மூலம் பயணிகளுக்கும், டாக்சி சேவையில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும், இ-பாஸ் தேவைப்பட்டால் என்னுடைய செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். அரைமணி நேரத்தில் இ-பாஸ் போட்டு தருகிறேன். அசல் இ-பாஸ் தான். போலி கிடையாது. ஆகவே யாரும் பயப்பட தேவையில்லை. யார் பயணம் செய்கிறார்களோ அவர்களுடைய அசல் ஆதார் கார்டை புகைப்படம் எடுத்து எனது வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்புங்கள். அதிகபட்சம் அரைமணி நேரத்தில் பாஸ் எடுத்து கொடுத்து விடுவேன். இதற்கான சேவை கட்டணமாக ரூ.500 வாங்கி வருகிறேன். இது வரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாஸ் எடுத்து கொடுத்து இருக்கிறோம். இந்த மாதத்திற்கு தேவைப்படும் டிரைவர்கள் எண்ணுடைய செல்போனில் தொடர்பு கொள்ளலாம் என்று கூறி, தன்னுடைய செல்போன் எண்ணையும் குறிப்பிடுகிறார்.

இது பற்றி மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் இது பற்றி விரிவான விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த டிராவல்ஸ் உரிமையாளர் கடலூர் சாவடியை சேர்ந்த 24 வயது வாலிபர் என்று தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்விடம் கேட்டபோது, அந்த ஆடியோவில் பேசிய நபர் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அவர் உண்மையில் இ-பாஸ் பெற்று உள்ளாரா? அல்லது போலி இ-பாஸ் வழங்கினாரா? அப்படியானால் அதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, இது வரை எவ்வளவு பணம் பெற்று உள்ளார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையின் முடிவில் தான் அதன் உண்மை தன்மை தெரிய வரும் என்றார்.
Tags:    

Similar News