செய்திகள்
மழை நீர் தேங்கியுள்ளதை படத்தில் காணலாம்.

பலத்த மழையால் கீழடியில் அகழாய்வு பணிகள் பாதிப்பு

Published On 2020-06-27 11:32 IST   |   Update On 2020-06-27 11:32:00 IST
சிவகங்கை மாவட்டம் கீழடியில் பலத்த மழையால் அகழாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
திருப்புவனம்:

சிவகங்கை மாவட்டம் கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் பகுதிகளில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வந்தன. இதில் பானைகள், செங்கல் கட்டிட சுவர் பகுதிகள், விலங்கின எலும்பு கூடு, மண் உலை, முதுமக்கள் தாழிகள், மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள், சிறிய பானைகள், நத்தை ஓடு, தங்க நாணயம், சங்கு வளையல்கள், மணிகள், பாசிகள், அம்மி அரவை கல் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

மணலூரில் சுடுமண் உலை, மண் திட்டு பகுதி, பெரிய, சிறிய எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கீழடி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதியில் ஆராய்ச்சிக்காக தோண்டப்பட்ட குழிகளில் மழைநீர் தேங்கி பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் அந்த குழிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றி குழிகளை தார்ப்பாய்கள் கொண்டு மூடி வைத்தனர். மழையால் அகழாய்வு பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

Similar News