செய்திகள்
மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகம் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்த காட்சி.

முழு ஊரடங்கு- வெறிச்சோடிய மாமல்லபுரம் கடற்கரை

Published On 2020-06-22 13:56 IST   |   Update On 2020-06-22 13:56:00 IST
முழு ஊரடங்கு மற்றும் சூரிய கிரகணத்தையொட்டி மக்கள் நடமாட்டம் இன்றி மாமல்லபுரம் கடற்கரை வெறிச்சொடி காணப்பட்டது.
மாமல்லபுரம்:

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த 4 மாவட்டங்களுக்கும் வருகிற ஜூன் 30-ந்தேதி வரை தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.

கடுமையான விதிமுறைகளுடன் அமல்படுத்தப்பட்ட இந்த முழு ஊரடங்கால் சர்வதேச சுற்றுலா மையான மாமல்லபுரம் நேற்று 3-வது நாளாக மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஒரு புறம் முழு ஊரடங்கு மறுபுறம் சூரிய கிரகணத்தையொட்டி நேற்று மக்கள் வெளியே வராமல் விடுகளுக்குள்ளேயே முடங்கினர்.

குறிப்பாக, உள்ளூர் மக்கள் சிலர் தங்கள் குழந்தைகளுடன் தினமும் கடற்கரை பகுதிக்கு வந்து பொழுதை போக்குவர். இந்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து உள்ளூர் மக்களின் நடமாட்டமும் இன்றி கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. கடற்கரை கோவிலும் ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.

குறிப்பாக, நேற்று சூரிய கிரகணத்தையொட்டி கொக்கிலமேடு, வெண்புருஷம், தேவனேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் பெரும்பாலோனோர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. அவர்கள் சூரியகிரகணம் முடிந்தவுடன் மதியம் 2 மணிக்கு குளித்துவிட்டு தங்கள் வீடுகளில் சூரிய நமஸ்காரம் செய்து வழிபாட்டு பணிகளில் ஈடுபட்டனர். வலை பின்னுதல், படகுகளை சீரமைத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

மேலும் சூரிய கிரகணம் மற்றும் முழு ஊரடங்கு காரணமாக கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் வாகன நடமாட்டம் இல்லாதால் வெறிச்சோடி காணப்பட்டது.

மாமல்லபுரம் புறவழிச்சாலையில் பல்லவன் சிலை அருகில் உள்ள சோதனை சாவடியில் நின்ற போலீசார் தேவையில்லாமல் ஊர் சுற்றும் வாலிபர்களை மடக்கி பிடித்து எச்சரித்து அனுப்பினர். ஒரு சில வாகனங்கள் மட்டுமே கிழக்கு கடற்கரை சாலையில் பயணித்தது.

Similar News