செய்திகள்
கொரோனா வைரஸ்

கடலூரில் கொரோனாவுக்கு முதியவர் பலி

Published On 2020-06-04 07:01 GMT   |   Update On 2020-06-04 07:01 GMT
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு 87 வயது முதியவர் ஒருவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடலூர்:

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதை தடுக்கும் வகையில் வருகிற 30-ந்தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்திலும் ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்களால் இந்த மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்தது. பின்னர் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றியவர்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். அவர்கள் மூலமாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தது. அவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் செயல்பட்ட கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது. இதனால் இந்த மாவட்டத்தை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் தண்டபாணி நகரில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த முதியவர் உள்பட 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தனர்.

அவர்களில் 87 வயது முதியவர் ஒருவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

Tags:    

Similar News