வீடு தேடி சென்று முதியோருக்கு மருத்துவம் பார்க்கும் பெண் மருத்துவர்- பொதுமக்கள் பாராட்டு
நாகப்பட்டினம்:
உலகை அச்சுறுத்தி வரும் கெரோனா நோய் பரவுதலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.
இதனால் மருத்துவ தேவைக்காக நோயாளிகள் மருத்துவமனைக்கு கூட்டமாக செல்வதால் நோய் தொற்று ஏற்படும் அபாயத்தை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்துவர் பிரியதர்ஷினி மற்றும் செவிலியர்கள் மருத்துவமனைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள முதியவர்கள், காசநோயாளி, நீரிழிவு, ரத்தக்கொதிப்பு உள்ளவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களுக்கு சளி, இருமல், மூச்சு திணறல் உள்ளதா என்றும் மேலும் சில பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு தேவையான மருந்துவ அறிவுரைகளை கூறி தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.
அதனைத்தொடர்ந்து கீழ்வேளூரில் செயல்பட்டு வரும் அவ்வை முதியோர் இல்லத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்தனர்.
அரசு மருத்துவர் பிரியதர்ஷினி வீடுகள் தேடி பலருக்கும் மருத்துவ உதவி செய்துவரும் இச்செயலை பலரும் பாராட்டினர்.