செய்திகள்
கோவை மாவட்டம்

வாகன விபத்து, திருட்டு குற்றங்கள் நடைபெறாத கோவை நகரம்

Published On 2020-04-10 05:00 GMT   |   Update On 2020-04-10 04:32 GMT
ஊரடங்கு உத்தரவால் கோவை மாநகரில் விபத்து, திருட்டு மற்றும் குற்றங்கள் நடைபெறாத நகரமாக உள்ளது.
கோவை:

கொரோனா வைரஸ் பாதிப்பு சமூக பரவலாக மாறுவதை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளான மளிகை, காய்கறி கடைகளை தவிர மற்ற கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. சாலைகளிலும் வாகனங்களை போலீசார் அனுமதிப்பதில்லை.

அதை மீறி சாலைகளில் வலம் வரும் வாகன ஓட்டிகளை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி எச்சரித்து அனுப்புகிறார்கள். மேலும் அவசியமின்றி சாலையில் வரும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் மற்றும் வழக்குகள் பதிவு செய்கிறார்கள்.

இந்த நிலையில் கோவை மாநகரில் கடந்த 25-ந் தேதி முதல் நேற்று வரை விபத்துக்கள் நடைபெறவில்லை. திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களும் நடக்கவில்லை. கோவை மாநகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களில் இருந்தும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும் அறிக்கையில் தங்கள் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகன விபத்து, திருட்டு, வழிப்பறி குற்ற சம்பவங்கள் இல்லை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் கூறியதாவது:-

ஊரடங்கு காரணமாக ஆயிரக்கணக்கான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் வீடுகளிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைக்காக ஒரு சிலர் மட்டுமே தங்களின் வாகனங்களில் சாலைகளில் வருகிறார்கள். இதனால் சாலையில் எப்போதாவது தான் ஒரு வாகனம் வருகிறது. இதனால் விபத்துக்கள் எதுவும் நடக்கவில்லை.

பொதுமக்கள் எல்லோரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். எனவே வீடு புகுந்து திருடுவது, வழிப்பறி சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. இதற்கு முன்பு சாதாரண நாட்களில் கோவை மாநகரில் 30 சதவீத வீடுகளாவது பூட்டப்பட்டிருக்கும். அந்த வீடுகளில் வசிப்பவர்கள் வெளியூர் சென்றதை பயன்படுத்தி திருட்டு கும்பல் கைவரிசை காட்டும் சம்பவங்கள் நடைபெற்றன.

ஆனால் இப்போது ஊரடங்கு காரணமாக திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறாத நகராக கோவை மாறி உள்ளது. டாஸ்மாக் கடைகள் இல்லாததால் மது குடித்து விட்டு வீண் தகராறில் ஈடுபடும் நபர்கள் யாரும் இல்லை. மேலும் இரவு நேரங்களில் போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வருவதால் திருட்டு, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறுவதில்லை.

ஊரடங்கு சட்டத்தால் கோவை மாநகரில் விபத்து, திருட்டு குற்றங்கள் எதுவும் கடந்த 15 நாட்களாக நடக்கவில்லை. ஆனால் 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. வேறு வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை.

கடந்த ஆண்டு இதே நாட்களான மார்ச் 24-ந் தேதி முதல் ஏப்ரல் 7-ந் தேதி வரை 14 வாகனங்கள் திருட்டு போயிருந்தன. 3 கொள்ளை வழக்குகள், 2 வீடுகளில் திருட்டு, 2 பேர் வாகன விபத்துக்களில் இறந்துள்ளனர். மூன்று சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் இந்த ஆண்டு அதுபோன்று எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் கோவை மாவட்டத்தில் கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் ஏப்ரல் 8-ந்தேதி வரை ஒரு கொலை வழக்கும், 16 தற்கொலை வழக்குகளும் பதிவாகி உள்ளன. 
Tags:    

Similar News