செய்திகள்
கைது

தனியார் பள்ளி முதல்வரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி செய்தவர் கைது

Published On 2020-03-19 17:40 GMT   |   Update On 2020-03-19 17:40 GMT
வேலூர் முன்னாள் கலெக்டர் பெயரை பயன்படுத்தி தனியார் பள்ளி முதல்வரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
வேலூர்:

வேலூர் கலெக்டராக ராமன் கடந்த ஆண்டு வரை பணியாற்றி வந்தார். அப்போது காட்பாடி அருகேயுள்ள தனியார் பள்ளியின் முதல்வரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் கலெக்டர் ராமனின் பெயரை கூறி ரூ.50 ஆயிரம் பணத்தை விழிப்புணர்வு பிரசாரத்துக்காக குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளார். அவர் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணத்தையும் பள்ளி முதல்வர் செலுத்தினார்.

சில நாட்கள் கடந்த நிலையில் மீண்டும் அந்த பள்ளியின் முதல்வரை தொடர்பு கொண்ட மர்ம நபர் மீண்டும் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக குறிப்பிட்ட வங்கிக் கண்க்கில் பணம் செலுத்துமாறு கூறியுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த பள்ளி முதல்வர், கலெக்டரை தொடர்பு கொண்டு பேசியபோது மோசடியான தகவல் என தெரியவந்தது.

இதையடுத்து, காட்பாடி போலீஸ் நிலையத்தில் மோசடி நபர் மீது புகார் அளிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மோசடி நபர் சிக்கவில்லை.

இதற்கிடையில், வேலூர் கலெக்டர் ராமன் சேலம் மாவட்டத்திற்கு இடமாறுதலாக சென்று விட்டார். ஆனால், வழக்கை தொடாந்த போலீசார் குறிப்பிட்ட வங்கிக் கணக்கு குறிப்பிட்ட செல்போன் எண் உள்ளிட்ட தகவல்களை வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். 

இதில் அந்த மோசடி நபர் ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டு ஊட்டி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பெயரை பயன்படுத்தி உணவக உரிமையாளர் ஒருவரிடம் ரூ.50 ஆயிரம் பணத்தை மோசடி செய்துள்ளது தெரியவந்தது. அதேபோல், திருப்பூர் மாவட்ட கலெக்டராக இருந்த பழனிசாமியின் பெயரை பயன்படுத்தி கடந்த 2018-ம் ஆண்டு தொழிலதிபர்களிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்துள்ளார் என்றும் தெரியவந்தது.

இந்நிலையில், வேலூர் கலெக்டராக இருந்த ராமன் பெயரை பயன்படுத்தி ரூ.50 ஆயிரம் மோசடி செய்ததாக கோவையைச் சேர்ந்த சந்தானபாரதி (வயது 42) என்பது தெரியவந்தது. காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ் தலைமையில் தனிப்படை போலீசார் கோவை சென்று சந்தானபாரதியை கைது செய்தனர்.
Tags:    

Similar News