செய்திகள்
கைதான சரவணன், பாஸ்கர்

ஆம்பூர் அருகே ரூ.8.80 லட்சம் கள்ள நோட்டுகளுடன் 2 பேர் கைது

Published On 2020-03-09 13:50 IST   |   Update On 2020-03-09 13:50:00 IST
ஆம்பூர் அருகே 500, 200 ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எந்திரம் மூலம் அச்சடித்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.8.80 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
ஆம்பூர்:

ஆம்பூர் அருகே உள்ள அய்யனூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது42). இவரது நண்பர் வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த பாஸ்கர் (43). இவர்கள் இருவரும் சேர்ந்து கள்ளநோட்டு அச்சடிக்க முடிவு செய்தனர்.

இதற்காக கள்ள நோட்டு அச்சடிக்க ஜெராக்ஸ் எந்திரம் வாங்கினர். அதனை அய்யனூர் கிராமத்தில் உள்ள சரவணன் வீட்டில் 2-வது மாடியில் வைத்து அங்கிருந்து ரூ.500 மற்றும் ரூ.200 கள்ள நோட்டுகளை ஜெராக்ஸ் மூலம் அச்சடித்தனர்.

இந்த கள்ள நோட்டுகளை மும்பையிலுள்ள ரவுடி கும்பல் மூலம் மும்பையில் புழக்கத்தில் விட்டனர். கடந்த 3-ந் தேதி பாஸ்கர் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கள்ள ரூபாய் நோட்டுகளுடன் மும்பை சென்றார். அவர் ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்றபோது மும்பை தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.

அவர்கள் நடத்திய விசாரணையில் ஆம்பூர் அய்யனூர் கிராமத்திலிருந்து கள்ள நோட்டுகள் மும்பைக்கு வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மும்பை தனிப்படை போலீஸ் அதிகாரி ராஜேஷ் படேல், தலைமையிலான போலீசார் பாஸ்கரை அழைத்துக்கொண்டு இன்று ஆம்பூர் வந்தனர்.

அவர்கள் இதுகுறித்து ஆம்பூர் டி.எஸ்.பி சச்சிதானந்தம் மற்றும் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோரை நேரில் சந்தித்து தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து மும்பை போலீசார் மற்றும் ஆம்பூர் டி.எஸ்.பி தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை அய்யனூர் கிராமத்திலுள்ள சரவணன் வீட்டை சுற்றிவளைத்தனர். அங்கிருந்த சரவணனை கைது செய்தனர்.

அவரது வீட்டில் நடத்திய அதிரடி சோதனையில் 2-வது மாடியில் கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் ஜெராக்ஸ் எந்திரம், மை, கட்டிங் எந்திரம் இருந்தது.



மேலும் அதே அறையில் ரூ.500, 200 கள்ள நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மொத்தம் ரூ.7 லட்சத்து 55 ஆயிரத்து 700 கள்ள நோட்டுகள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மும்பையில் பறிமுதல் செய்ததையும் சேர்த்து மொத்தம் ரூ.8.80 லட்சம் கள்ள நோட்டுகள் இருந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட எந்திரம் மற்றும் கள்ள நோட்டுகளை ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

கைதான சரவணன் மற்றும் பாஸ்கரிடம் இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ள நோட்டு அச்சடிக்கும் எந்திரம் எங்கிருந்து கிடைத்தது? எத்தனை ஆண்டுகளாக கள்ள நோட்டுகளை அச்சடித்து வருகின்றனர்? அவர்கள் எந்த பகுதியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டிலேயே கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News